ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கும் தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 13-ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 14-ஆம் தேதி வேளாண்மைத்துறை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், பட்ஜெட் தொடர்பாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கும் தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி பொது பட்ஜெட், ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் பட்ஜெட் மீதான விவாதத்தில் கடைசி நாளின் பதிலுரை அளிக்கப்படும். சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகளின் மீதான விவாதம் ஆகஸ்ட் 23ஆம் தேதி தொடங்குகிறது. காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. உறுப்பினர்களின் மேஜைகளில் கையடக்க கணினி பொருத்தப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்” என்று கூறினார்.
முன்னதாக, தமிழ்நாடு பட்ஜெட் வரும் 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது என்று பேரவை செயலாளர் சீனிவாசன் கடந்த 4ஆம் தேதி அறிவித்திருந்தார்.
ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றபின் முதன்முதலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து முடிவு செய்யப்பட்டது. ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றபின் முதன்முதலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினத்தில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் என தனித்தனியாக தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தலில் அளித்த சில வாக்குறுதிகளை நிறைவேற்றியது. இந்த பட்ஜெட்டின் போது, இன்னும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறித்து இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என்று பல குடும்பத்தார்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
TN Budget 2021: திமுக அரசின் முதல் பட்ஜெட்: ஆகஸ்ட் 13ல் கூடுகிறது சட்டமன்றம்!