அரசு பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் நல்ல தொடக்கம் என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார். இத்திட்டமானது அறிவுத் தீனி தேடி வரும் மாணவச் செல்வங்களின் வயிற்றுப் பசியை போக்குவதற்கான நல்ல தொடக்கமாக இந்தத் திட்டம் இருக்கும் என இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
"முதலமைச்சரின் காலை உணவு திட்டம்"
அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டசத்து குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் "முதலமைச்சரின் காலை உணவு திட்டம்" எனும் பெயரில் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என சட்டசபையில் கடந்த மே7-ம் அன்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வேலை நாட்களில் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை இன்று மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
”திட்டம் பெரிதும் உதவும்"
இந்நிலையில், இத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த்ள்ள பாமக நிறுவனர் இராமதாஸ், ஐந்து வயதான அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளுக்கு கொண்டு வருவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். பள்ளியில் சேர்ந்த மாணவர்களை தக்கவைத்துக் கொள்ள அவர்களின் பசியைப் போக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவும்.
”சிறு தானியங்களை சேர்க்க வேண்டும்”
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவாக்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுகளில் படிப்படியாக சிறு தானியங்களை சேர்த்து, அவர்களின் ஊட்டச் சத்தை மேம்படுத்த வேண்டும் என இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.