தமிழக பாஜக செயலாளர் எஸ்.ஜி. சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர்.


எஸ்.ஜி. சூர்யா கைது:


தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து, அவதூறு வழக்கில் எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்டதை அறிந்த பாஜகவினர், காவல் ஆணையர் அலுவலகம் முன்பு குவிந்தனர். பின்பு திடீரென பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


வழக்கு:


எஸ். ஜி. சூர்யா மீது 5-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, இருபிரிவினர் இடையே பகையை ஏற்படுத்துதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


கைதுக்கான காரணம்:


தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் கைது செய்தனர். சமீபத்தில் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து  ட்வீட் செய்தது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூகப் பிரச்சினைகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியின் இரட்டை வேடம் குறித்த அவரது விமர்சனத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எம்.பி. சு. வெங்கடேசனுக்கு எதிராக அவர் கூறிய கருத்து ஒரு பங்கைக் கொண்டிருந்திருக்கலாம் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.


டிவிட்டரில் பதிவு:


விஸ்வநாதன் என்ற கம்யூனிஸ்ட் கவுன்சிலர் அலட்சியத்தால் மலம் நிரம்பிய வடிகால் சுத்தம் செய்யும் போது ஒரு தொழிலாளி இறந்ததாக சூர்யா குற்றம் சாட்டியிருந்தார். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், எம்.பி சு.வெங்கடேசனிடம் தனது கவலைகளை தெரிவித்தார். அப்போது, அவதூறு பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் எஸ்.ஜி. சூர்யா கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.