ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜூனியர் சூப்பர்ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து நகைச்சுவையாக காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர். மேலும், ஜீ தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார்கள் அளித்தனர்.


இதையடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் ஜீ தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 7 நாட்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 






மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நீதிக்காக நிற்பதற்காக அமைச்சர் எல்.முருகனுக்கு நன்றி. செயல்முறை இரு தரப்பினருக்கும் நியாயமாக இருக்கட்டும். குழந்தைகளை எந்த பிரச்சாரத்திற்கும் பயன்படுத்த வேண்டாம். அதுவே எங்கள் விருப்பம். நாங்கள் ஊடகங்களை மதிக்கிறோம்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


முன்னதாக, ஜீ தொலைக்காட்சியில் குழந்தைகளை வைத்து நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று வாரந்தோறும் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், கடந்த வார நிகழ்ச்சியில் சிறுவர்கள் இருவர் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள், பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை உள்ளிட்டவற்றை கடுமையாக கேலி செய்தும், பிரதமரின் வெளிநாட்டு பயணங்களையும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் பிரதமர் வருகையின்போது ஏற்படும் எதிர்ப்பு உள்ளிட்ட விவகாரங்களை ஒளிபரப்பியிருந்தனர்.




தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் இந்த வீடியோவை பகிர்ந்து சிரிக்க, சிந்திக்க என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, இந்த நகைச்சுவை நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய ஜீ தொலைக்காட்சி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வற்புறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண