சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “நான் கட்டியிருக்கும் ரஃபேல் கைக்கடிகாரத்தை பெல் அண்ட் ரோஸ் எனும் நிறுவனம் ரஃபேல் விமானத்தை தயாரித்த டசால்ட் ஏவியேஷன் எனும் பிரெஞ்சு நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்துள்ளது. இந்த மாடலில் உலகத்தில் மொத்தமாகவே 500 கைக்கடிகாரங்கள் தான் உள்ளன. அவற்றில் நான் பயன்படுத்துவது 147வது கைக்கடிகாரம். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள உலோகங்கள் காரணமாக, ரஃபேல் கைக்கடிகாரம் ஒரு செங்கல் அளவிலான எடையை கொண்டது. இந்த மாடல் வாட்ச் இந்தியாவிலேயே மொத்தமாக இரண்டு தான் விற்கப்பட்டுள்ளன. ஒன்று நான் பயன்படுத்தும் நிலையில், மற்றொன்றை மும்பையில் ஒரு பெரு நிறுவனத்தில் பணியாற்றும் நபர் பயன்படுத்தி வருகிறார். தான் பயன்படுத்தும் கைகடிகாரம் கோயம்புத்தூரில் உள்ள ஜிம்சன் கடிகார நிறுவனத்தால் வாங்கப்பட்டது. அங்கிருந்து 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கோவையை சேர்ந்த சேரலாதன் என்பவர் வாங்கினார். எனது நண்பரான அவரை அணுகி அந்த கைக்கடிகாரத்தை மே மாதம் 27ம் தேதியன்று நான் வாங்கினேன். பெங்களூரு காவல்துறையில் பணியாற்றியபோது, லஞ்ச பணத்தில் வாங்கியது என கூறுவது எல்லாம் உண்மை அல்ல. இதுதொடர்பாக சிலர் போலியான ரசிதுகளை பகிர்ந்து வருகின்றனர். 3 லட்ச ரூபாய்க்கு வாங்கிய இந்த ஒரு கைகடிகாரத்தை மட்டும் தான், கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பயன்படுத்தி வருகிறேன்” என கூறினார்.