இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வருவது கஷ்டமாக இருக்கிறது என்றும், தன்னையும் சீமான் போல் பேசவைத்து விட்டதாகவும் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெறவிருக்கிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில்,  இன்று கோவையில் நிருபர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:


சீமான் போல புலம்பல்:


"இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வருவது ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் தொண்டைத் தண்ணீர் கிழிய கல்லூரி கல்லூரியாக மைக்கில் கத்துகிறேன். கடைசியில் என்னையும் சீமான் அண்ணனைப் போல் பேச வைத்து விட்டீர்கள். நான் அப்படி பேச மாட்டேன் என நினைத்தேன், ஆனால் கடைசியில் நானும் அந்த நிலைமைக்கு வந்து விட்டேன். கல்லூரிகள் தோறும் ஏறி தொண்டை தண்ணீர் வற்ற தம்பி வாங்க தம்பி என அழைக்கிறோம்.


ஆனால் தேர்தலைப் பார்த்து பாதி பேர் ஓடி விட்டார்கள். என்ன தலைவரே இப்படி செய்கிறார்கள் என்கின்றனர்.  “அமைதியாக இருங்கள். காலம் மாறும்; காட்சிகள் மாறும்; புதிய அரசியலை முன்னெடுப்போம்” என நாங்கள் சொல்லி வருகிறோம். ஆனால், மனம் வெதும்பி சொல்கிறேன். புதிய ஆட்சியாளர்கள் வர வேண்டுமென்றால், இந்த முட்டாள்தனத்தை முதலில் நிறுத்த வேண்டும். எல்லாமே அதிகாரமற்ற அமைப்புகளாக உள்ளது. நான் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தொண்டனாக இருந்தாலும், representation of people actஐ திருத்துவது மிகப்பெரிய கஷ்டமாக உள்ளது. 


மாற்றத்திற்கு தயாரா?


லஞ்சம் கொடுத்து மாட்டிக்கொண்டால் ஆறு ஆண்டு எதுவும் செய்ய முடியாது. அரசியல் பக்கமே வர முடியாது என இன்று நாடாளுமன்றத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டு வருவது ரொம்ப கஷ்டம். 303 பா.ஜ.க. எம்பிக்கள் இருந்தாலும் இந்தத் திருத்தத்தைக் கொண்டு வருவது கஷ்டம்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த 38 எம்பிக்கள் இருக்கிறார்கள், ஆனால் நான்கு ஆண்டுகளில் அவர்கள் என்ன சாதித்தார்கள். என்னைத் திட்டுவதை ஒரு சாதனையாக வைத்திருக்கிறார்கள்.


ஒரு ரூபாய், ஒரு குண்டூசியை தமிழ்நாட்டுக்கு கொண்டு  வந்தார்களா? இவர்கள் பழைய அரசியல்முறையின் அங்கமாக இருக்கிறார்கள்.அதனால் காலத்தை மாற்றுவோம்.  என்னைப் போன்ற அரசியல்வாதிகள் மாற்றத்துக்கு தயாராக இருக்கிறோமா, அரசியலை மாற்றுவதற்கு கால் எடுத்து வைக்கிறோமா என்பது தான் கேள்வி” இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் படிக்க: ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி சத்யஸ்ரீ தாய் புற்றுநோயால் மரணம் - மக்கள் வேதனை


மேலும் படிக்க:  விக்கிரவாண்டி அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ? - மருத்துவமனை முன்பு போலீசார் குவிப்பு