TN Assembly: கள்ளக்குறிச்சி விவகாரங்கள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வர, அதிமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளன.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்:
துறை வாரியான மானியக் கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்க, தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் முன்னாள் உறுப்பினர்கள் மறைவு தொடர்பாக இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, “கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் விற்பது போன்ற குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என தெரிவித்தார்.
தமிழகத்தை உலுக்கும் கள்ளக்குறிச்சி விவகாரம்:
இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாரயம் அருந்தியதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஐ நெருங்கியுள்ளது. சிலருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ள நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த மாநிலத்தையே உலுக்கியுள்ளது. எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மற்றும் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர். இந்நிலையில், இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி விவகாரம் முக்கிய விவாதப் பொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்:
சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் விவகாரம் தொடர்பாக விவாதிக்க, அதிமுக சார்பில் வேலுமணி உள்ளிட்டோர் சபாநாயகரை சந்தித்து கவன ஈர்ப்பு தீர்மான கொண்டு வர கடிதம் வழங்கியுள்ளனர். இதேபோன்று, சிபிஎம் சட்டமன்ற குழு தலைவர் நாகை மாலியும், நெல்லை மாஞ்சோலை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மான கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளார். அதன்படி, இன்று கவன ஈர்ப்பு தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விரிவான விவாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவும் இன்று இந்த பிரச்னை குறித்து விவாதிக்க தீவிரம் காட்டி வருகிறது.
மரக்காணம் கள்ளச்சாராய மரணங்களுக்குப் பிறகு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? கள்ளக்குறிச்சியில் இத்தனை மரணங்கள் நிகழ காரணம் என்ன? மாவட்ட ஆட்சியர் முதலில் உண்மையை மறைத்தது ஏன்? கள்ளச்சாராய விற்பனயை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைஅக்ள் என்ன? கள்ளச்சாராய வியாபாரிகள் உடன் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு என்பன போன்ற பல கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு இன்று பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.