கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 42 பேர் இந்த கள்ளச்சாராயத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் இன்று அதிகாலை உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 50 ஆக அதிகரித்தது. 


எங்கெங்கு எவ்வளவு உயிரிழப்பு பதிவு..? 


கடந்த 3 நாட்களில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தால் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. 3 பேர் என ஆரம்பித்த உயிரிழப்பு தற்போது வரை 50 ஐ தொட்டுள்ளது. மேலும், இந்த கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிலைமை மோசமாகி வருவதால், உயிரிழப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. 


இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அதிகபட்சமாக 28 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுபோக, விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரியில் 3 பேரும் என மொத்தமாக 50 பேரை காவு வாங்கியுள்ளது இந்த கள்ளச்சாராயம். 


கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம்:


சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இரவு வரை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில்  11 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது நாகபிள்ளை, பாலு  வீரமுத்து, ராஜேந்திரன்- s/o கோவிந்தராஜன், ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை சேலத்தில் மொத்தமாக 15 ஆக அதிகரித்துள்ளது. 


தொடர்ந்து 32 பேர்  தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.