தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். 

Continues below advertisement

ஆட்சியைத் தீர்மானிக்கும் கூட்டணி:

திமுக - அதிமுக - தவெக - நாம் தமிழர் என போட்டி ஆட்சிக்கான போட்டி உள்ளது. இதில் பிரதான போட்டி திமுக - அதிமுக இடையே உள்ளது. இருந்தாலும் தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஜய்யின் தவெக வாக்கு சதவீதம் திமுக - அதிமுக வாக்கு சதவீதத்தை கணிசமாக பாதிக்கும் என்றே கருதப்படுகிறது. 

இதனால், ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கூட்டணியை வலுவாக அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் கூட்டணியில் முக்கிய அங்கும் வகிக்கும் கட்சியாக பாமக, தேமுதிக உள்ளது. இந்த இரண்டு கட்சிகளும் இன்னும் எந்த கட்சியுடனும் அதிகாரப்பூர்வமாக யாருடனும் கூட்டணி சேரவில்லை. 

Continues below advertisement

பிரேமலதாவின் நிபந்தனை:

பாமக-வில் தந்தை - மகன் சண்டை உச்சத்தில் நடந்து கொண்டிருப்பதால், முதலில் தேமுதிக-வை தங்கள் பக்கம் கொண்டு வர திமுக - அதிமுக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

திமுக மற்றும் அதிமுக இரண்டு தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் பிரேமலதாவிடம் தேமுதிக-விற்கு ராஜ்யசபா சீட் தர இரு கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதேசமயம், சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியினர் அதிக இடம் தருகிறார்களோ? அவர்களுடனே கூட்டணி என்று தேமுதிக நிபந்தனை விதித்துள்ளது. 

அதிமுக-விற்கு  வாய்ப்பு பிரகாசம்:

பிரேமலதாவின் நிபந்தனையின்படி அதிமுக-வே அவர்களுக்கு அதிக சட்டமன்ற தொகுதிகள் வரும் தேர்தலில் ஒதுக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. ஏனென்றால் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என கூட்டணி பட்டியல் பெரியது. 

ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜக, தமாக மட்டுமே தற்போது வரை உள்ளது. இதனால், அமமுக, ஓ.பன்னீர்செல்வத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விஜயகாந்திற்கு தமிழ்நாட்டில் எப்போதும் செல்வாக்கு இருக்கும் என்பதால் தேமுதிக தங்கள் பக்கம் இருப்பது பலமே என்று அதிமுக-வும் கருதுகிறது. 

மறுபக்கம் தவெக-வுடன் இதுவரை யாரும் கூட்டணி வைக்காத நிலையில், விஜயகாந்த் செல்வாக்கை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விஜய்யும் காய் நகர்த்தி வருகிறார். இதனால், பிரேமலதா என்ன முடிவெடுக்கப்போகிறார்? தேமுதிக யார் பக்கம் சாயப்போகிறது? என்பது ஜனவரியில் தெரிய வரும். தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விஜயகாந்தின் தேமுதிக அரசியல் ரீதியாக கடந்த கால தேர்தல்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், விஜயகாந்தின் செல்வாக்கு என்பது கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு நிகரானது ஆகும். இதனால், அவருக்கான ரசிகர்கள் தேமுதிக-விற்கு தற்போதும் தொடர்ந்து வாக்களித்து வருகின்றனர்.