சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசிநாள் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில், ஆளுநர் உரை மீது பதிலுரை அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது. அண்ணா மீது சத்தியமாக, கருணாநிதி மீது சத்தியமாக தி.மு.க.வினர் சிறிய குற்றத்தில் ஈடுபட்டாலும் இந்த ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பான்.
பதுங்கும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், இந்த அரசு பாய்ந்து பிடிக்கும். அப்படி பதுங்கிய ஒருவரும் ( முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி) கடந்த 5-ந் தேதி கைது செய்யப்பட்டுவிட்டார். “ இவ்வாறு முதல்வர் பேசினார்.
முன்னதாக, கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ராஜேந்திர பாலாஜி. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பு வகித்த காலத்தில் அமைச்சர் பொறுப்பு வகித்த ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து பேசி வந்தார்.
இந்த நிலையில், வேலை வாங்கித் தருவதாக ரூபாய் 3 கோடி வரை ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்தனர். காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பியோடிய ராஜேந்திர பாலாஜி 19 நாட்களுக்கு பிறகு, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் விருதுநகர் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து, திருச்சி சிறையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடைக்கப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்