அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை இன்று காலை முதல் தடைப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு
தமிழகம் முழுவதும் சுமார் 34,344 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இணைந்துள்ளனர். இவர்கள் மூலம் 1.45 கோடி வீடுகளுக்கு அரசு கேபிள் டிவி சேவையானது சென்றடையும் என கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மாதம் பொது மக்களுக்கு ரூ. 70 என்ற மிக குறைந்த கட்டணத்தில் 90 முதல் 100 சேனல்களுடன் தரமான கேபிள் டிவி சேவையை வழங்கி வருகிறது. இதன் மூலம் மிக அதிக அளவிலான கேபிள் ஆப்பரேட்டர்களும், பொதுமக்களும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் டிவி சேவையினை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அரசு கேபிள் டிவி சேவையானது இன்று காலை முதலே தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் உள்ள செட்டாப் பாக்ஸ்களில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு விளக்கம்
தமிழக முழுவதும் அரசு கேபிள் டிவி சேவை பாதிக்கப்பட்டதை அடுத்து மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, "நேற்று முதல் (19-11-2022) தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மென்பொருள் சேவைகள் வழங்கி வந்த தனியார் நிறுவனத்தின் மென்பொருள் சேவைகளில் திடீரென தடைபட்டதால் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவைகள் பல பகுதிகளில் உள்ள செட்டாப் பாக்ஸ்களில் தடங்கல் ஏற்பட்டது”.
"பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய தொழில்நுட்பக் குழு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதிகபட்சம் இன்னும் 24 மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சரி செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "அரசு கேபிள் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி கேபிள் ஆபரேட்டர்கள் பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் அனைவரையும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். அந்த தனியார் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கேபிள் டிவி நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.