இதுதொடர்பான அறிக்கையில், வங்கக்கடலில்  மையம் கொண்டு இருந்த, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5.30 மணி அளவில், கூடுதல் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே 600 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 630 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 670 கிமீ தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்  மையம் கொண்டுள்ளது. தற்போதைக்கு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடலில் அதே பகுதியில் நீடிக்கும் எனவும், பிறகு மெதுவாக மேற்கு - வடமேற்கு திசையில், புதுச்சேரி - தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 






காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் இன்று மாலைக்கு பிறகு மழை தொடங்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பிறகு படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து, அடுத்த இரு தினங்களுக்கு சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், குறிப்பிட்ட பகுதிகளுக்கு 22ஆம் தேதி வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


முன்னதாக, பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால், அடுத்த இரு தினங்களுக்கான கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகளும் திரும்ப பெறப்பட்டன.