பரபரப்பு நிறைந்த அரசியல் சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லிக்கு சென்றுள்ளார். டெல்லியில் தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ்நாட்டில் ஆளுநராக பொறுப்பேற்றதிலிந்து அவருக்கும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது. இருவர் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தது. 


மோதல் விவகாரம்: 


கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி,  ”மாநிலத்தை தமிழ்நாடு என்றழைக்கப்படாமல் தமிழகம் என்றே அழைக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் எந்த ஒரு விஷயத்தை முன்னெடுத்தாலும் அதற்கு தமிழ்நாடு மட்டும் மறுப்பு தெரிவிப்பது வாடிக்கையாகி விட்டது. தமிழர்கள் தங்களை திராவிடர்களாக உணருகின்றனர். தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது” என கூறினார்.


அதைதொடர்ந்து, நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் ரவி, தனது உரையில் இடம் பெற்றிருந்த தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக THIS Government (இந்த அரசு) என தெரிவித்திருந்தார். அதோடு, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழிலும், தமிழ்நாடு ஆளுநர் என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழக ஆளுநர் என்ற வார்த்தை இடம் பெற்றது. மேலும், தமிழ்நாடு அரசின் இலச்சினையும் (முத்திரை) இடம் பெறவில்லை. ஆளுநரின் இந்த அடுத்தடுத்த செயல்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு, தமிழ்நாடு அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. 


இதனை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த திமுகவினர்,  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் புகார் மனுவை வழங்கியது. இதே போன்று, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் புகார் மனு அனுப்பப்பட்டது.


இதற்கு விளக்கமளிக்கும் வகையில் ஆளுநர் டெல்லிக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டார். பின்னர் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பண்டை காலங்களில் தமிழ்நாடு என்ற வாசகம் இல்லை, அதனால் தமிழகம் என பயன்படுத்தப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது. 


ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்பட்ட குடியரசு தின விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ஆளுநர் மனம் மாறினார் என பலரும் கூறினர். அதே போல், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில், ஆளுநருக்கும் முதல்வருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் இடைவெளியை அதிகரிக்க ஆளுநரும் இடம் கொடுக்கவில்லை, முதல்வரும் இடம் கொடுக்கவில்லை, தேநீர் விருந்திற்கான அழைப்பிதழில் ’தமிழ்நாடு’ என்ற அரசமைப்பு சட்ட ரீதியிலான பெயரை பதிவு செய்தததுடன், தொலைபேசியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேசி அழைப்பு விடுத்தார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 


இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினும் மற்ற எல்லா பிரச்சினைகளிலும் கையாளும் பெருந்தன்மையுடன் கூடிய மென்மையான அணுகுமுறையினையே குடியரசு நாளையொட்டிய நிகழ்வுகளிலும் பின்பற்றினார் என்றும் அதனால் அவர் பிரச்சினையை பெரிதாக்க விரும்பாமல், அதற்கு காரண கர்த்தாக்களை பற்றி அலட்டிக்கொள்ளாமல், மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணியை மட்டுமே மனதில் கொண்டு செயல்பட்டுள்ளார் என்றும் முரசொலி தெரிவித்தது. 


வரும் பிப்ரவரி 27-ம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து தரப்பினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தரப்பில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனை பற்றி விளக்கமளிக்கவும், அரசியல் சூழல் குறித்தும் பேசப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஆளுநரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.