Continues below advertisement

பாஜக மூத்த தலைவர் தமிழிசையை சென்னையில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பாஜகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை ஆதரித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை தலைமையில் பாஜகவினர் மும்மொழிக்கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர்.

Continues below advertisement

அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் நடத்தக்கூடாது என போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பாஜகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் தமிழிசை கைது செய்தனர்.

தமிழிசை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் தமிழிசை போலீசார் வாகனத்தில் ஏறாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய தமிழிசை, “சாமானிய மக்களிடமே கையெழுத்து வாங்குகிறோம். காவல்துறை ஒத்துழைக்க வேண்டும். அமைதியாக கையெழுத்து வாங்குவதால் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்துவிட போகிறது. அமைதியாகத்தான் கேட்கிறோம். நானும் பொதுமக்கள் தான். நீங்கள் எங்களுக்கு என்றால் அனுமதி கொடுக்க மாட்டீங்க. மற்றவரக்ளுக்கு எல்லாம் அனுமதி கொடுப்பீங்க. நீங்கள் செய்வது சரியா?” என வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தி வருகின்றனர். ஒரு கோடி கையெழுத்து பெற்று குடியரசுத்தலைவரிடம் கொடுக்க பாஜகவினர் முயன்று வருகின்றனர்.

இதனிடையே போலீசாரின் இத்தகைய செயலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, பாஜக சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநர், அக்கா திருமதி  தமிழிசை அவர்களைக் கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை. அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மொழியை வியாபாரமாக்கி, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. திமுகவின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி, மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதலமைச்சர் திரு. ஸ்டாலின்.

அதன் விளைவே, ஜனநாயக ரீதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தைத் தடுப்பதும், கைது செய்வதும். இந்தக் கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம். எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும் முதலமைச்சர் அவர்களே? தேசியக் கல்விக் கொள்கை, உங்கள் கட்சியில் இருக்கும் கடைக்கோடி தொண்டர்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வியையும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பையும் அரசுப் பள்ளியில் இலவசமாக வழங்குகிறது. அதை ஏன் தடுக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையடுத்து போலீசார் தடுத்து நிறுத்தி வைத்த சில மணிநேரங்களில் தமிழிசை விடுவிக்கப்பட்டார். ஆனால் அப்பகுதியில் திமுகவினரும் குவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.