Tigers Death: முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 3 நாட்களில் இரண்டு புலிகள் உயிரிழக்க, காரணம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முதுமலை புலிகள் சரணாலயம்:
தென்னிந்தியாவின் முதல் வனவிலங்கு சரணாலயமான முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரியில் 681 சதுர கிலோமீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது. யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான்கள், மயில்கள் மற்றும் நரிகள் என பல்வேறு விதமான விலங்குகள் இங்கு காணப்படுகின்றன. தற்போதே அங்கு கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளதால், 20 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் நீர் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும், விலங்குகளை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான், முதுமலை காப்பகத்தில் அடுத்தடுத்து இரண்டு புலிகள் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காயங்களுடன் பெண் புலி சடலம்:
கூடலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை மற்றும் பென்னைக் காப்புக்காடு பகுதியில் கடந்து 3ம் தேதி, வனத்துறையினர் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கொத்தமடவு பகுதியில் புலி ஒன்று இறந்து கிடந்ததை கண்டுள்ளனர். உடனடியாக கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் உயிரிழந்த பெண் புலிக்கு, புலி நெஞ்சு பகுதியில் காயம் இருந்ததுடன், உட்பகுதியில் ரத்த கசிவுகளும் இருந்ததும் கண்டறியப்பட்டது. அதோடு, கடந்த சில நாட்களாக புலி உணவு உட்கொள்ளாத நிலையில், அதன் இரைப்பையில் அதிக அளவில் குடல் புழுக்களும் இருந்துள்ளன. மேலும், புலிக்கு காயம் ஏற்பட்டது எப்படி என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆண் புலியின் சடலம் கண்டெடுப்பு
இந்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, முதுமலை காப்பகத்தில் மேலும் ஒரு ஆண் புலி இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எடக்காடு பகுதியில் அந்த புலி இறந்து கிடந்துள்ளது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. மூன்று நாட்களில் அடுத்தடுத்து இரண்டு புலிகள் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மற்ற புலிகளால் தாக்கப்பட்டு இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் விலங்குகள் தாக்கி இருக்குமா? மனிதர்கள் ஏதேனும் தாக்குதல் நடத்தினார்களா? அல்லது ஏதேனும் நோய்வாய்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
முதுமலையில் புலிகளின் எண்ணிக்கை:
2018ம் ஆண்டு நிலவரப்படி முதுமலை புலிகள் காப்பகத்தில் 103 புலிகள் இருந்தன. வனத்துறையின் சீரிய நடவடிக்கைகள் காரணமாக 2022ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 114 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் உள்ள ஐந்து புலிகள் காப்பகங்களில் முதுமலை புலிகள் காப்பகத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான புலிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அங்கு அடுத்தடுத்து புலிகள் உயிரிழப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் மாதத்திலும் தெப்பக்காடு வனப்பகுதியில் ஒரு பெண்புலி உயிரிழந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு, கடந்த 2023ம் ஆண்டில் 40 நாட்களில் 6 புலிக்குட்டிகள் உட்பட 10 புலிகள் உயிரிழந்தது நினைவுகூறத்தக்கது.
புலிகளின் முக்கியத்துவம்:
சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு புலிகள் முக்கியமான உயிரினமாகும். ஏனெனில்அவை தாவரவகைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இது நிலத்தையும் பிற உயிரினங்களையும் பாதுகாக்கிறது. உதாரணமாக வேட்டையாடும் இனத்தைச் சேர்ந்த புலிகள் மான் போன்ற தாவரவகைகளை சாப்பிடுவதன் மூலம், தாவரவகை எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. தாவர உண்ணிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், புலிகள் அதிகப்படியான மேய்ச்சலையும் நிலத்தின் சீரழிவையும் தடுக்க உதவுகின்றன.
நில சீரழிவை தடுப்பதன் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு தண்ணீரை வழங்கும் நீர்நிலைகளை அப்படியே வைத்திருக்க புலிகள் உதவுகின்றன. இதன் மூலம், அதிக எண்ணிக்கையிலான பிற உயிரினங்களையும் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் பாதுகாக்க புலிகள் உதவுகின்றன. புலிகளின் வாழ்விடங்கள் மற்ற காடுகளை விட அதிக கார்பனை சேமித்து வைக்கின்றன, இது காலநிலை மாற்றத்தைத் தணிக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே புலியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றின் உயிரிழப்பை தடுக்க, அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களும் அதற்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனபதே, வன உயிர் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.