சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக பொறுப்பேற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் நல குறைவு காரணமாக, சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ:
ஈரோடு கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா உயிரிழந்ததையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சி, காங்கிரஸ் தரப்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் நடந்தது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்று, சுமார் 60 ஆயிரத்திற்கு மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மருத்துவமனையில் அனுமதி:
தற்போது, லேசான நெஞ்சு வலி காரணமாக உடல் நல குறைவு காரணமாக, போருரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெஞ்சு வலி காரணமாக ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலத்துடன் உள்ளதாக மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லிக்கு விமானத்தில் சென்று திரும்பிய அசதியில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.