விழுப்புரம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்று முடிந்தது. கட்சியின் மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கொள்கைகளும், விஜய்யின் உரையும் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது.
தவெகவின் செயற்குழு கூட்டம்:
இந்த நிலையில், பனையூரில் உள்ள விஜய்யின் இல்லத்தில் தவெகவின் செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது. தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள், இதில் கலந்து கொண்டனர். தவெகவின் முதல் மாநில மாநாட்டில் திமுக, பாஜகவை நேரடியாக விமர்சிக்காமல் மறைமுகமாக விமர்சித்திருந்த நிலையில், செயற்குழு கூட்டத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார் விஜய்.
தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றுவதாக குற்றம்சாட்டிய விஜய், "பொய் வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது; சமூக நீதியின் பாதையில் பயணிப்பதாக திமுக அரசு கூறுவதை மக்கள் நம்ப மாட்டார்கள் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அச்சாரமிடும் ஆய்வை காலதாமதமின்றி நடத்த வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் உள்ள குறிப்பிட்ட சிலரின் நலனில் திமுக அரசு அக்கறையுடன் செயல்படுகிறது" என்றார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
இதை தொடர்ந்து செயற்குழுக் கூட்டத்தில் மொத்தம் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பரந்தூர் விமான நிலையம், கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்கம், என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதல் ஆகிய முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
"காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் 13 நீர்நிலைகள் உள்ளன. இவற்றை அழிப்பது சென்னையை நிரந்தரமாக வெள்ளக் காடாக்கும் சீர்கேட்டுக்கு வழிவகுக்கும். சென்னையைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் மனநிலையை உணர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். விவசாயம் மற்றும் விவசாய நிலங்களின் பாதுகாப்பை. ஒரு கொள்கையாகவே முன்னெடுக்கும் தமிழக வெற்றிக் கழகம், தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியாகப் போராடவும் தயங்காது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறது" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: IND Vs NZ: வரலாற்றில் மோசமான தோல்வி - நியூசிலாந்திடம் 3-0 என டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி