ஆன்லைனில் முடிக்க வேண்டியதை அமெரிக்கா போய் முடித்த அறிவாளி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் விமர்சித்துள்ளாார். அமமுக கறிக்கோழி கொழு கொழு வளரும், முட்டை போடாது, குஞ்சு பொறிக்காது என்றும் வைகைச் செல்வன் சாடியுள்ளார்.


"கொழு கொழு வளரும் கறிக்கோழி அமமுக"


தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வைகைச் செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில இலக்கிய அணி செயலாளருமான வைகைச் செல்வன் பேசுகையில், "அதிமுக ஆளும் கட்சியாக வெகு காலம் இல்லை. இன்னும் 10 மாத காலம் தான் உள்ளது. திமுக ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை. 


ஆனால், அதிமுக தொடர்ந்து 3 முறை ஆட்சிக்கு வந்துள்ளது. கூட்டணி வைக்கமால் திமுக ஆட்சி பிடித்தது இல்லை. கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடித்தது அதிமுக. கட்சி உடைந்து விட்டதாக கூறுகின்றனர். அதிமுக தொடங்கியது முதல் இந்த பிரச்சனை இருந்து வருகிறது" என்றார்.


"அறிவாளி முதல்வர் ஸ்டாலின்"


டிடிவி தினகரனை விமர்சித்து பேசிய வைகைச் செல்வன், "அமமுக கறிக்கோழி கொழு கொழு வளரும், முட்டை போடாது, குஞ்சு பொறிக்காது. டிடிவி தினகரன் சட்டமன்ற தேர்தலில் முட்டையோடு, போய் விட்டார். ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம், ஆந்திராவில் வாரிசுகள் முதல்வராக வந்தது போன்று தமிழகத்தில் கருணாநிதிக்கு பிறகு ஒரு கழிச்சடை, அதன் பிறகு ஒரு துணை கழிச்சடை வந்துள்ளது.


ஆன்லைனில் முடிக்க வேண்டியதே அமெரிக்கா போய் முடித்த அறிவாளி நம்ம முதல்வர் மு.க. ஸ்டாலின். இங்கு சைக்கிள் ஓட்ட முடியமால் சிகாகோவில் சைக்கிள் ஓட்டி பார்க்கிறார்" என்றார்.


தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சான் பிரான்சிஸ்கோவில் 29ஆம் தேதி நடந்த தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார்.


கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சிகாகோ சென்றார். அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.