Tamil Pudhalvan Scheme: மாணவர்களுக்கு ரூ.1000 நிதியுதவி வழங்கும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி கோவையில் இன்று நடைபெறுகிறது.


கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்:


கோவையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை விமானம் மூலம் கோவைக்கு பயணிக்கிறார். அதன்படி, இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு விமான நிலையத்தை அடையும் அவருக்கு,  திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர்  அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.


மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை:


அங்கு, தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் மூலம் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள்,  அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் வழியில்) பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படவுள்ளது. முன்னதாக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வர பயின்று, உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை, கடந்த 2022ம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கினார். அந்த திட்டம் தற்போது மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம், 3.68 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும், அதற்காக 360 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உக்கடம் மேம்பாலம் திறப்பு:


முதலமைச்சரின் இன்றைய நிகழ்ச்சியின் போது, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.470  கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆத்துப்பாலம் - உக்கடம் மேம்பாலத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார். உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பேரூர், செல்வபுரம், ஆகிய  ஊர்களுக்கு  விரைந்து செல்லும் வகையில்,  நெடுஞ்சாலைத்துறை சார்பில்  ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8கி.மீ நீளத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் திறக்கப்படுவதால் கோவை மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருணாநிதி சிலை திறப்பு:


தொடர்ந்து, பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயிரியல் துறை மற்றும்  சமூக அறிவியல் துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டடங்களை  முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். அதன் பின்னர் 12 மணியளவில் கணியூர் பகுதியில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிகளை முடித்த பின்னர் மதியம் 1 மணியளவில், கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்படுவார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.