Chess Champ Gukesh: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷை வாழ்த்தி, முதலமைச்சர்கள் ஸ்டாலின் மற்றும் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட பதிவுகள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன.
உலக செஸ் சாம்பியன் குகேஷ்:
தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்த குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார். 18 வயதிலேயே இந்த பட்டத்தை வென்று இளம் வயதில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்நிலையில் தான், குகேஷ் தமிழரா? தெலுங்கரா? என்ற விவாதம் இணையத்தில் வெடித்துள்ளது. இதற்கு காரணம் அவரை வாழ்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட பதிவுகளே ஆகும்.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து:
வியாழனன்று மாலை சரியாக 7.25 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “இளம் வயது உலக செஸ் சாம்பியன் ஆனதற்கு வாழ்த்துகள் குகேஷ். உங்களுடைய சாதனை செஸ் விளையாட்டில் இந்தியாவின் பாரம்பரியத்தை தொடர்கிறது. மேலும், உலக தரம் வாய்ந்த மற்றொரு வீரரை உருவாக்கியதன் மூலம், உலகளாவிய செஸ் தலைநகராக அதன் இடத்தை மீண்டும் சென்னை உறுதிப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு உங்களால் பெருமை கொள்கிறது" என குறிப்பிட்டு கழுத்தில் தங்கப் பதக்கத்தை அணிவித்த புகைப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இந்த பதிவை தொடர்ந்து சரியாக 2 நிமிட இடைவெளியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “எங்கள் சொந்த தெலுங்கு பையனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் அபாரமான சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது. அடுத்து வரும் தசாப்தங்களில் நீங்கள் இன்னும் பல வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். ஒரு முதலமைச்சர் தமிழர் எனவும், மற்றொரு முதலமைச்சர் தெலுங்கர் எனவும் குறிப்பிட, குகேஷ் தமிழரா? தெலுங்கரா? என்ற விவாதம் இணையத்தில் வெடித்துள்ளது.
குகேஷ் தொம்மராஜு யார்?
குகேஷ் தொம்மராஜு தெலுங்கு பாரம்பரியத்தைச் சேர்ந்தவர், ஆனால் பிறந்து வளர்ந்தது சென்னையில்தான். இருவரும் மருத்துவ வல்லுநர்கள். சதுரங்கத்தில் குகேஷின் ஆர்வம் ஒப்பீட்டளவில் தாமதமாக வளர்ந்தது, ஆனால் அவரது திறமை விரைவில் வெளிப்பட்டு கவனத்தை ஈர்த்தது. எட்டு வயதிலேயே, FIDE-மதிப்பீடு பெற்ற வீரராக ஆனார்.
இணையத்தில் வெடித்த பிரச்னை:
குகேஷின் தோற்றம் மற்றும் வம்சாவளி தொடர்பான உரிமை கோருவதற்கான ஒரு போர் ஆன்லைனில் வெடித்தது. இனம் மற்றும் மொழி பற்றிய ஒரு பெரிய விவாதமாக விரைவாக மாறியது. குகேஷிற்கு தமிழ்நாடு குறிப்பிடத்தக்க நிதியுதவியை வழங்கியுள்ளதாக பலர் சுட்டிக்காட்டினர். அதன்படி, ஒரு X பயனர். “தமிழ்நாடு அரசாங்கம் குகேஷிற்கு ரூ. 75 லட்சம் பரிசாக வழங்கிய” செய்தியை பகிர்ந்துள்ளார்.
மற்றொரு பயனரோ, ”குகேஷ் பிறந்து வளர்ந்தது தமிழ்நாடாக இருந்தாலும், அவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள். எனவே குகேஷ் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட தெலுங்கர்” என பதிவிட்டுள்ளார். இதனிடையே, ”தமிழரோ அல்லது தெலுங்கரோ, அவர் இந்தியாவிற்கு பதக்கம் வென்றார் என்பதை கொண்டாடுங்கள்” என மற்றொரு பயனர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.