ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவிழந்தது!
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் (டிச. 14, காலை 9 மணி) மேற்கு வட மேற்கு திசையில் குமரிக்கடல் வழியே மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த முகேஷ்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற முகேஷிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள குகேஷ், உங்களது ஆதரவுக்கும், ஊக்கப்படுத்துதலுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை:
தொடர்கனமழை காரணமாக தமிழ்நாட்டின் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிலையங்களுக்கு விடுப்பு அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கோயிலில் காலையிலேயே பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாலையில், மலைமீது மகா தீபம் ஏற்றப்பட்டுள்ளது. பக்தர்கள் மலை மீது செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையடிவார பாதையில் போலீசார் பக்தர்களை தடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்
2001 நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தின் 23ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தாக்குதலில் உயிரிழந்த 6 பாதுகாப்பு படையினர், 2 நாடாளுமன்ற வளாக பாதுகாவலர்கள் மற்றும் தோட்டப் பணியாளர் என 9 பேருக்கு பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, உறுப்பினர்கள் மரியாதை செலுத்தினர்.
நாடாளுமன்ற விவாதத்தில் பிரதமர் மோடி
அரசமைப்பு சாசனம் ஏற்கப்பட்டு 75-வது ஆண்டை எட்டியதைக் குறிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் 4 நாட்கள் விவாதம் நடத்தப்படுகிறது. இன்றைய கேள்வி நேரத்துக்குப் பிறகு விவாதங்கள் தொடங்கும். இது மக்களவை நிகழ்ச்சி நிரலிலும் பட்டியலிடப்பட்டு உள்ளது. அரசியல் சாசனம் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (சனிக்கிழமை) மக்களவையில் பதில் அளிக்கிறார்.
1,500 பேரின் தண்டனையை குறைத்த பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் பதவி விலக உள்ள நிலையில், ஒரே நாளில் சுமார் 1500 பேரின் தண்டனைகளை குறைத்துள்ளார். 19 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் அதிக நபர்களுக்கு கருணை காட்டப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 200 உக்ரைன் ராணுவ வீரர்கள் மரணம் - ரஷ்யா தகவல்
கடந்த கடந்த 24 மணி நேரத்தில், ”உக்ரைன் ஆயுதப்படைகள் 200 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை இழந்துள்ளன, பீரங்கி ஒன்று, பீரங்கிகளை அழிக்கும் வாகனங்கள், 2 கவச வாகனங்கள், 4 கார்கள் மற்றும் 3 மோட்டார்கள் அழிக்கப்பட்டன” என ரஷ்யா தெரிவித்துள்ளது.
பிரிஸ்பேன் போட்டியின் போது மழைக்கு வாய்ப்பா?
பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான, மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில், போட்டி தொடங்கும் முன் அங்கு 60 சதவீதம் மழை பெய்ய பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2-வது நாளில் 59 சதவீதம், 3-வது நாளில் 60 சதவீதமும், கடைசி 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் ராஜினாமா
பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கில்லெஸ்பி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உதவி பயிற்சியாளர் டிம் நீல்சனின் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் வாரியம் புதுப்பிக்க மறுத்ததை அடுத்து அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.