திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இன்று (அக். 22) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
ஆரஞ்சு அலர்ட் எங்கெங்கே?
இந்த நிலையில், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களுக்கு இன்று அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு நீலகிரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு, இன்று மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கன மழை வாய்ப்பு
அதேபோல விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
6 நாட்களுக்கு கன மழை
தமிழகத்தில் 6 நாட்களுக்கு கன மழை தொடரும். அக்டோபர் 28ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆகாது
இந்த நிலையில் தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப் பெறாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னதாக, தென்கிழக்கு அரேபியக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவில் தமிழ்நாட்டுக் கடற்கரையில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் கன மழை விட்டு விட்டுப் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.