அடுத்த 3 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 


அடுத்த 3 நாட்களுக்கான மழைக்கான வாய்ப்பு:


கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 25.11.2022 முதல் 29.11.2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 


தண்டரம்பேட்டை (திருவண்ணாமலை) 5,செங்கம் (திருவண்ணாமலை) 3, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), திருவாலங்காடு (திருவள்ளூர்) தலா 2, மூங்கில்துறை (கள்ளக்குறிச்சி), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), ராயக்கோட்டா (கிருஷ்ணகிரி), சூளகிரி (கிருஷ்ணகிரி), திருவண்ணாமலை (திருவண்ணாமலை), மாரண்டஹள்ளி (தருமபுரி), அரக்கோணம் (இராணிப்பேட்டை), அழகரை எஸ்டேட் (நீலகிரி), ஓசூர் (கிருஷ்ணகிரி) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 


வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவு:


நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையிலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.


தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் கடந்த வாரம் நவம்பர் 17 முதல் 23 வரை வடகிழக்கு பருவமழை வெகு குறைவாக இயல்பை விட பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 34 மில்லி மீட்டர். ஆனால் தற்பொழுது பதிவான மழையின் அளவு 3 மில்லி மீட்டர் 91% குறைவாக மழை பதிவாகியுள்ளது.


16 மாவட்டத்தில் மழை பெய்யவில்லை, 22 மாவட்டத்தில் இயல்பை விட குறைவான அளவு மழை பதிவாகியுள்ளது. அக்டோபர் 1 முதல் நவம்பர் 23 வரையிலும் தமிழகம் புதுவை காரைக்கால் ஆக்கிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பொறுத்தவரையிலும் பதிவான மழை அளவு 330 மீ. மீட்டர். இந்த காலகட்டத்தில் இயல்பான மழையின் அளவு 317 மில்லி மீட்டர் இயல்பை விட 4% அதிகமாக மழை பதிவாகியுள்ளது.


கடந்த இரண்டு வாரங்களின் நிலையை பொறுத்த வரையிலும், குறிப்பாக கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் இயல்பை விட 17 சதவீதம் பதிவாகியிருந்த நிலையில் கடந்த வாரம் அது நான்கு சதவீதமாக குறைந்துள்ளது. வெப்பநிலை பொறுத்த வரையிலும் அதிகபட்ச வெப்பநிலையும் குறைந்தபட்ச வெப்பநிலையும் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இயல்பை ஒட்டி இருந்தது.


நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரையிலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.