கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு நகை மற்றும் பயிர் கடன் வழங்காமல் அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருவாரூர் மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு 2 லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணியிலும், ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாளடி நெல் சாகுபடி பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நெல் சாகுபடி பணி தொடங்கிய பொழுது தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக இரண்டு முறை நெல் பயிர்கள் கனமழையின் காரணமாக முழுவதுமாக பாதிக்கப்பட்டு மீண்டும் நடவு மற்றும் தெளிப்பு பணிகள் மூலமாக நெல் சாகுபடி பணிகளில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விவசாய நிலத்தில் தேங்கி இருந்த மழை நீரை வடிய வைத்து நெல் பயிர்களுக்கு யூரியா டிஏபி உள்ளிட்ட இடுபொருட்களை விவசாயிகள் அடித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பித்த 222 விவசாயிகளுக்கு நகை கடன் மற்றும் பயிர் கடன் வழங்காமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.




கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கூத்தனூர் அகர திருமாளம், கோவில் திருமாளம், கொத்தவாசல், ரெட்டைக்குடி, செம்பியமங்கலம் உட்பட 12 கிராம விவசாயிகள் தங்களுக்கு தேவையான பயிர் கடன் உள்ளிட்ட வரவு செலவுகளை வைத்துள்ளனர். இந்த ஆண்டு இந்த வங்கிக்கு ரூ நான்கு கோடியே 80 லட்சத்தை மத்திய கூட்டுறவு வங்கி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் முதல் கட்டமாக ரூ.4 கோடி நிதி வரப்பட்டது. அதனைக் கொண்டு 831 விவசாயிகள் பயிர் கடன் மற்றும் நகை கடன் கேட்டு விண்ணப்பித்த நிலையில் 609 விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் நகை கடன் வழங்கப்பட்ட நிலையில் எஞ்சியுள்ள 222 விவசாயிகள் பயிர் கடன் மற்றும் நகை கடன் இதுவரை வழங்கப்படவில்லை. அவர்களுக்கு கடன் வழங்காமல் கூட்டுறவு கடன் சங்கம் இழுத்தடிப்பு செய்து வருகிறது.




உதாரணமாக முடிகொண்டான் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற விவசாயி கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி அன்று தனது 5 சவரன் தங்க நகையை கூத்தனூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் கொடுத்து கடன் கேட்டு விண்ணப்பித்தார் அவருக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக தனியாரிடம் ஐந்து பைசா வட்டிக்கு பணம் வாங்கி தனது விவசாயப் பணியை மேற்கொண்டு வருகிறார். இது போல் மற்ற விவசாயிகளும் பரிதவித்து வருகின்றனர். தற்போது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விவசாயிகள் உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் வாங்குவதற்காக கடன் கேட்டு விண்ணப்பித்துள்ள நிலையில் காலதாமதம் ஆவதால் பயிர்கள் வளர்ந்து வயிறுக்கான இடுபொருட்கள் வைக்க காலதாமதமாகி வருகிறது. அவ்வாறு தாமதம் செய்து உரம் தெளித்தால் எந்த பயனும் இருக்காது என வேதனை தெரிவிக்கும் விவசாயிகள், தனியாரிடம் கூடுதல் வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே உடனடியாக கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கூட்டுறவு வங்கி செயலாளர் மணிகண்டன் கூறும்போது முதல் கட்டமாக நான்கு கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நகை கடன் மற்றும் விவசாய கடன் வழங்கப்பட்டுள்ளது மேலும் 80 லட்சம் கேட்டு விண்ணப்பித்து தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணம் வந்தவுடன் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.