தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,000 கன அடியிலிருந்து 7500 கன அடியாக அதிகரிப்பு.

 

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் கடந்த நவம்பர் மாதம் முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வினாடிக்கு 500 கன அடியாக இருந்து வந்தது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கியவுடன், நீர்திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அறிவுறுத்தியும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கவில்ல. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 500 கன அடியாகவே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடைமழை அவ்வப்போது பெய்துவருவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 4,000 கன அடியாக இருந்து வந்தது.

 



கடந்த ஒரு வாரமாக கர்நாடக, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதில் ஓசூர், அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கேரட்டி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 5,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 7000 கன அடியாக உயர்ந்தது. ஆனால் மழை குறைந்ததால், மீண்டும் நீர்வரத்து சரிந்து வினாடிக்கு 5000 கன அடியாக குறைந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், மேலும் நீர்வரத்து அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 7500 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 



 

 தொடர்ந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு கோடை காலம் தொடங்கியவுடன் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  தற்போது தொடர் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து கன மழை காரணமாக, காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருப்பதால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தொடர்ந்து நீர்வரத்தை கண்காணித்து, அளவீடு செய்து வருகின்றனர். தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால், மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது என மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.