தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. நாட்டில் கொரோனாவால் உயிரிழப்போர் பெரும்பாலோனார் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவே உயிரிழப்பதால், தமிழகத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் பணியை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை, கிண்டியில் உள்ள கிங்ஸ் நிறுவனத்தில் புதிய ஆக்சிஜன் படுக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். அப்போது, அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தார். பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, “முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சைக்கு இலவச சிகிச்சை பெறும் அரசாணணை வெளியிடப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு கட்டணம் என்ன என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 890 மருத்துவமனைகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, 890 மருத்துவமனைகளிலும், பொதுமக்கள் எந்த மருத்துவமனைகளில் அரசு காப்பீடு திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற விவரத்தையும், கட்டணத்தையும் குறிப்பிட்டு எழுதி போர்டு வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசின் சார்பில் காப்பீடுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, தனியார் மருத்துவமனை கட்டணம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வசூலிப்பதாக புகார் வந்தால் மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலக அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள். கொரோனா முதல் அலையில் 13 சதவீதம் வரை தடுப்பூசிகள் வீணாகியுள்ளது. ஆனால், சமூக வலைதளங்களில் 7 லட்சம் தடுப்பூசிகளை அரசு கையில் வைத்துக்கொண்டு போடாமல் உள்ளது என்று தவறான செய்தியை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். தமிழக அரசிடம் 2 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. அதையும் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பியுள்ளோம். முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகளை பயன்படுத்துகிறோம். பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்திற்கு வரும் தடுப்பூசி எண்ணிக்கை குறைவாகதான் உள்ளது” எனக் கூறினார்.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்திற்கு அதிகமாக பதிவாகியிருந்தது. மேலும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் கடந்த சில 4 தினங்களாக 400-க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. நேற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை இறங்கு முகத்தில் குறையத் தொடங்கியுள்ளது. தற்போது ஆக்சிஜன் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் நடவடிக்கையை எடுத்து வரும் தமிழக அரசு, தமிழகத்திலே ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.