வரும் 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கம் வேலை நிறுத்தம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. இதனால் வெளியூரில் பணிபுரிபவர்கள், படிப்பவர்கள் என பொங்கலுக்கு சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டவர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது. இந்த வேலை நிறுத்த அறிவிப்பால் மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல ரயில் மற்றும் ஆம்னி பேருந்துகளை நாடவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் ரயிலில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே இன்னும் அறிவிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை அதாவது போக்குவரத்து கழக தொழிற்சங்கம், தொழிலாளர் நலத்துறை மற்றும் போக்குவரத்துக் கழகம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஜனவரி 9ஆம் தேதி முதல் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் சிஐடியூ, ஏஐடியூ மற்றும் ஹெஎம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தனியாகவும், அண்ணா தொழிற்சங்க பேரவை தனியாகவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.
இது தொடர்பாக சிஐடியு தொழிற்சங்கத்தினைச் சார்ந்த சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஏதாவது தருகின்றோம் என பேச்சுவார்த்தையில் கூறவில்லை. ஓய்வு பெற்றோர்க்கு கடந்த 8 ஆண்டுகளாக எதுவும் வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்றோரின் பஞ்சப்படி விவகாரத்தில் சமரசம் செய்ய முடியாது என வலியுறுத்தினோம். கோரிக்கைகள் தொடர்பாக மீண்டும் மீண்டும் நேரம் கேட்பது எங்களை ஏமாற்றுவதைப் போல் உள்ளது. இரண்டு கூட்டமைப்புகள் இணைந்து ஜனவரி 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது. காலி பணியிடங்களை நிரப்புதல், ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அதாவது 1. வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு கொடுக்க வேண்டும். 2. ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படியை உடனடியாக வழங்கவேண்டும். ஊதிய ஒப்பந்தம் வருகின்றபோது, ஓய்வூதியர்களுக்கு உரிய ஒப்பந்தப் பலனைக் கொடுக்கவேண்டும். 3. 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். 4. காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 5. கருணை அடிப்படையிலான வேலைக்கு தகுதியானவர்களுக்கு வேலை வழங்கவேண்டும். 6. 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்சன் முறையில் பென்ன்சன் வழங்கவேண்டும். இதற்கு அரசு தரப்பில் என்ன பதில் என கேட்டபோது, அமைச்சர் ஏற்கனவே ஒரு அறிக்கை அளித்துள்ளார். பொங்கலுக்குப் பின்னர் இது குறித்து பேசலாம். ஆகவே கொஞ்சம் அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் இருந்தும் நிர்வாகத் தரப்பில் இருந்தும் பதில் வந்தது. இந்த பதிலில் எங்களுக்கு எந்த திருப்தியும் இல்லை. 15வது ஊதிய ஒப்பந்தம் கோரிக்கையைத் தவிர மற்ற கோரிக்கைகள் அனைத்தும் பல ஆண்டுகளாக பல சுற்று பேச்சுவார்த்தைக்கு உள்ளானவை” என பேசினார்.
பொங்கல் பண்டிகை நாட்களில் போக்குவரத்து சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால் அரசு இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வினை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.