CM Stalin: ஸ்டார்ட்-அப் பிரிவில் சிறந்த செயல்பாடு கொண்ட மாநிலமாக தமிழ்நாடு தேர்வானதற்கு, திமுக ஆட்சியில் செய்த சீர்திருத்தங்களே காரணம் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
விருது வென்ற தமிழ்நாடு
மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (DPIIT) துறை, புத்தாக்க நிறுவனங்களுக்கு (இன்னோவேடிவ் எனப்படும் புதிய சிந்தனைகளின் அடிப்படையில்) உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று வெளியான 2022ம் ஆண்டிற்கான தரவரிசைப்பட்டியலில் வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில், மிகச் சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பிடித்தது. அதேநேரம், ஸ்டார்ட் நிறுவனங்களுக்கு உகந்த சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக, தமிழ்நாடு தேர்வாகியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்:
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஸ்டார்ட்-அப் தரவரிசைப் பட்டியலில், கடந்த ஆட்சிக் காலத்தில் 2018-இல் கடைசித் தரநிலையில் இருந்த தமிழ்நாடு, நமது #DravidianModel ஆட்சியில் 2022-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது! TANSEED புத்தொழில் ஆதார நிதி, பட்டியலினத்தவர்/பழங்குடியினர் தொழில் நிதியம், LaunchPad நிகழ்வுகள் என ஒட்டுமொத்தமாக நமது அரசு முன்னெடுத்த மறுசீரமைப்பு முயற்சிகளாலேயே தமிழ்நாடு இன்று சிகரத்தில் அமர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 7600 StartUp நிறுவனங்கள் உள்ளன. அவற்றுள் 2022-ஆம் ஆண்டில் மட்டும் 2250 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதே நாம் நிகழ்த்திய பாய்ச்சலுக்குச் சான்று. இந்தச் சாதனை மாற்றத்தைச் சாத்தியமாக்க உழைத்த அமைச்சர் அன்பரனுக்கும், அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள்! இந்த இடத்தைத் தக்கவைக்கவும் மேலும் உயரங்களைத் தொட உழைக்கவும் வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
5 பிரிவுகளில் விருது வென்ற மாநிலங்கள்:
மிகச் சிறந்த மாநிலங்கள்: குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, இமாச்சலபிரதேசம்
சிறந்த மாநிலங்கள்: மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, அருணாசல பிரதேசம், மேகாலயா
முதன்மை மாநிலங்கள்: ஆந்திரா, அசாம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், திரிபுரா
ஆர்வம் காட்டும் மாநிலங்கள்: பீகார், அரியானா. அந்தமான் -நிகோபார் தீவுகள்,நாகாலாந்து
முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள்: சத்தீஸ்கர், டெல்லி. ஜம்மு-காஷ்மீர், சண்டிகர்,தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லடாக்