தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் வரும் 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஊரடங்கு காரணமாக வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கும் மக்களின் வசதிக்காக இன்றும், நாளையும் வெளியூர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதையடுத்து, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


“தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் வரும் 24-ந் தேதி வரை இரு வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா தொற்றின் தீவிரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24-ந் தேதி முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நீட்டித்து இன்று உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்றும் நாளையும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதித்து உத்தரவிட்டுள்ளார்.




இதன் அடிப்படையில் இன்றும், நாளையும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் இரு நாட்களுக்கு 1500 பேருந்துகள் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும், மாநிலத்தின் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே 3 ஆயிரம் பேருந்துகளை இயக்கிட போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது.


மேலும், பயணிகள் கூடுதலாக வரும் பட்சத்தில் தேவையான பேருந்துகள் கூடுதலாக இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட இரு நாட்களில் பயணிகளின் தேவைக்கேற்ப சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் சிறப்பு பேருந்துகளும் இயங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சென்னை – மார்த்தாண்டம் – மாலை 6 மணி முதல் ( புறப்படும் நேரம்)


சென்னை – நாகர்கோவில் – மாலை 7 மணி முதல் (புறப்படும் நேரம்)


சென்னை – செங்கோட்டை – மாலை 7 மணி முதல் ( புறப்படும் நேரம்)


சென்னை – திருநெல்வேலி – இரவு 7.30 மணி முதல் ( புறப்படும் நேரம்)


சென்னை – திண்டுக்கல் – இரவு 8 மணி முதல்(புறப்படும் நேரம்)


சென்னை – மதுரை – இரவு 11.30 மணி முதல் ( புறப்படும் நேரம்)


சென்னை – திருச்சி – இரவு 11.45 மணி முதல் ( புறப்படும் நேரம்)


சிறப்பு பேருந்துகளில் அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு முறையான முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்தல் போன்ற முறைகள் பின்பற்றப்படும். பயணிகளும் இதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கோயம்பேடு மற்றும் தாம்பரம் பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் சென்றிட ஏதுவாக, மாநகரப் பேருந்துகள் சென்னையின் முக்கிய இடங்களில் இருந்து இயக்கப்படும்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.