சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த உச்ச உயர்தீவிர புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு அரபிக்கடலுக்கு சென்று நேற்றிரவு 120 கிலோமீட்டர் வடகிழக்கு திசையில் சவுராஷ்ட்ரா கரையை கடந்தது. தற்போது, அப்பகுதியில் வலுவிழந்து தீவிர புயலாக நிலை கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையைப் பொறுத்தமட்டில் அடுத்த 24 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக விராலிமலையில் 4 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக தஞ்சை மதுக்கூரில் 1 செ.மீ. ஆக பதிவாகியுள்ளது. வரும் 22-ஆம் தேதி தமிழக கடலோர பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் அபாயம் உள்ளதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.