9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தலை நடத்த 6 மாதம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, 9 ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல்  தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. 


மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வரும் 6ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த இருக்கிறது. 



  


2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டு, மனுத்தாக்கல் முடிந்து, வேட்புமனு பரிசீலனையும் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், பெண்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்ற காரணத்தை காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடை விதிக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நிர்வகிப்பதற்கான சட்டவரைவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு தனி அலுவலர்கள் நியமனம், 6 மாதங்களுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வந்தது.


இது தொடர்பான வழக்குகள் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில், தமிழகத்தில் நகர்புற பகுதிகளை தவிர்த்து ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தலை டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.


மேலும் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும், நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் இந்த 9 மாவட்டங்களில் இருக்கும் ஊரக பகுதிகளில் வார்டு மறுவரை முடியாததால் இந்த மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இதனையடுத்து ஊரகப்பகுதிகளில் மட்டும் கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டது.


இதனையெடுத்து நகரப்பகுதிகளில் நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தலையும் 9 மாவட்டங்களில் நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சித் தேர்தலையும் மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் 2020ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக இன்று வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.


வார்டு மறுவரை முடியாத காரணத்தால் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடித்து முடிவுகளை அறிவிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.