சட்டப்பேரவை சாதாரணமானது அல்ல. சட்டப்பேரவைக்கு என்று இறையாண்மை உள்ளது. குடியரசுத் தலைவர் பற்றியோ, ஆளுநர் பற்றியோ பேச சட்டப்பேரவை கூடவில்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளர்.


தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 10 மசோதாக்கள் மீது விளக்கம் கேட்டு ஆளுநர் அவற்றை திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக வரும் சனிக்கிழமை சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது.


இதுகுறித்து திருவண்ணாமலையில் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


’’பேரவையில் நிறைவேற்றி அனுப்பக்கூடிய மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏதேனும் நிறை, குறைகள் இருந்தால் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.


சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்


இந்த நிலையில் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி, அனுப்பி வைக்க சனிக்கிழமை அன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது ஆளுநர் பற்றியோ, குடியரசுத் தலைவர், மத்திய அரசு பற்றியோ எந்த விவாதமும் நடைபெறாது. மசோதாக்கள் மீது தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்படும்.


அந்த மசோதாக்களுக்கு உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரியவில்லை.  


சட்டப்பேரவை சாதாரணமானது அல்ல. சட்டப்பேரவைக்கு என்று இறையாண்மை உள்ளது. அந்த இறையாண்மை உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களின் கருத்தை பேரவையில் கொண்டுவந்து, ஏகமனதாக நிறைவேற்றிய மசோதாக்கள் அவை. அவற்றை குடியரசுத் தலைவரும் மத்திய அரசும் கட்டாயம் பரிசீலனை செய்ய வேண்டும்.


மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர், அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வதற்கு முழு உரிமை இருக்கிறது’’.


இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.


ஏற்கனவே நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று இருந்த நிலையில், தற்போது மீண்டும் சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட உள்ளது. 


உச்ச நீதிமன்றம் கண்டனம்


சட்டப்பேரவையில்  நிறைவேற்றி அனுப்பிய  மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணையில் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் பல்வேறு கருத்துகளை கூறி இருந்தது.


அதன்படி, ’’ஆளுநர் ரவி சட்டசபை மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அரசியல் சாசனம் 200-வது பிரிவின்படி சட்டசபையில் நிறைவேற்றிய அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத நிலையில் மறுபரிசீலனைக்காக கூடிய விரைவில் ஆளுநர் சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அப்படி திருப்பி அனுப்புகிற மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் அதற்கு தாமதம் இல்லாமல் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும்’’ என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.