நாளை நடைபெறும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதால், சிறப்பு கூட்டத்தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 10 மசோதாக்கள் மீது விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பினார். இது தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தையும் கூட்ட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு பேசுகையில்,
’’சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பக்கூடிய மசோதாக்களுக்கு ஒரு மாநிலத்தின் ஆளுநராக அவர் அனுமதி அளிக்க வேண்டும். அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏதேனும் நிறை, குறைகள் இருந்தால் திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் ஆளுநர் அதனைச் செய்யாமல் கிடப்பில் போட்டு மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலையில் மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி, அனுப்பி வைக்க சனிக்கிழமை அன்று அதாவது நவம்பர் 18ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது ஆளுநர் பற்றியோ, குடியரசுத் தலைவர், மத்திய அரசு பற்றியோ எந்த விவாதமும் நடைபெறாது. மசோதாக்கள் மீது தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்படும் என கூறினார். மேலும், சட்டமன்றத்தில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரியவில்லை.
சட்டப்பேரவை சாதாரணமானது அல்ல. சட்டப்பேரவைக்கு என்று இறையாண்மை உள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களின் கருத்தை பேரவைக்கு கொண்டு வந்து, பெரும்பான்மையாக நிறைவேற்றிய மசோதாக்கள் அவை. அவற்றை குடியரசுத் தலைவரும் மத்திய அரசும் கட்டாயம் பரிசீலனை செய்ய வேண்டும்.மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர், அமைச்சர்கள், பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வதற்கு முழு உரிமை இருக்கிறது’’ இவ்வாறு சபாநாயகர் பேசியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு கூட்டும் இந்த சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை கட்டாயம் பங்குபெறும் என்றாலும், பிராதான எதிர்க்கட்சியான அதிமுக பங்கேற்குமா என்ற கேள்வி இருந்து வந்தது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பாமகவும் பங்கேற்கவுள்ளது. அதேபோல் பாஜக இந்த கூட்டத்தில் பங்கேற்குமா என்ற கேள்வியும் இருந்தது. இந்நிலையில் அதிமுகவும் பாஜகவும் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளதால் நாளை நடைபெறும் சிறப்பு சட்டமன்ற கூட்டம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.