Thiruvannamalai sipcot: திருவண்ணாமலை சிப்காட் விவகாரத்தில் கைதான விவசாயிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கு அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார். 


திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் 3-வது திட்ட விரிவாக்க பணிக்காக மேல்மா உட்பட 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் சார்பில் கடந்த ஜூலை மாதம் முதல் 124 நாட்களுக்கு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிமைகக்காக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையில் விவசாயிகள் மீதான நடவடிக்கை குறித்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அதில், ”விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்து வைக்க வேண்டும் என்ற உள்நோக்கம் எதுவும் இல்லை. திருவண்ணாமலை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டதில் இருந்து அதில் ஒரு தொழிற்சாலை கூட கிடையாது. மாவட்டம் முழுவதும் விவசாயத்தை அடிப்படையாக கொண்டது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தொழிற்சாலை வந்தால் தான் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை வைத்ததால், எம்.எல்.ஏ. அமைச்சர்கள் அரசுக்கு முறையிட்டோம். அப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் சிப்காட் அமைக்க திட்டமிட்டு 3 கட்டங்களாக பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 



அதில் முதல் கட்டமாக 622 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அதில் 13 தொழிற்சாலைகள் வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது. இதில் செய்யாறு, ஆரணி, வந்தவாசி பகுதியை சேர்ந்த ஏறத்தாழ 30,000 பேர் பணியில் உள்ளனர். 2வது கட்டமாக 1860 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதில் 55 தொழிற்சாலைகள் நிறுவப்பட உள்ளது. அதன் மூலம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக உள்ளது. மேலும் வேலை வாய்ப்பை அதிகரிக்க 3வது கட்ட நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

 

இதில் சம்பந்தப்பட்ட 9 கிராமங்களுக்கு அரசின் சார்பாக பல்வேறு முறை விளக்க கூட்டம் நடத்தி, கருத்து கேட்கப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து  ஆக்கிரமிக்கப்பட்டத்தை விட இரண்டரை மடங்கு நிலத்தை அரசு வழங்குகிறது. விவசாயிகளும் முக்கியம். அதேநேரம் வேலைவாய்ப்பு உருவாக்க நிலங்களும் தேவைப்படுகிறது. தொழிற்சாலைகளை உருவாக்கினால் தான் படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்கும். தொழிற்சாலையை கடலில் கட்டமுடியுமா..? இல்லை வானத்தில் கட்ட முடியுமா..? தொழிற்சாலை கட்ட நாம் தான் நிலத்தை கொடுக்க வேண்டும். 

 

ஆனால், ஒருசிலர் மட்டும் தொடர்ந்து 100 நாட்களாக அப்பகுதி மக்களை தூண்டி விட்டு அரசுக்கு எதிராக போராட வைக்கின்றனர். நாங்களும் தான் விவசாயிகள். அதன் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியாதா. மாவட்டம் முழுவதும் விவசாய நிலமாக தான் உள்ளது. அதில் ஒரு 5 சதவீத பகுதியை மட்டுமே தொழிற்சாலைக்காக எடுக்கிறோம். விவசாயம் தேவைப்படுவது போல் தொழிற்சாலைகளும் அவசியம் தானே. போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் குடும்பத்தினரே சிப்காட் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கின்றனர். திட்டமிட்டே திமுக அரசு செயல்பட கூடாது என்பதற்காகவும், இளைஞர்களுக்கு வேலை கிடைக்க கூடாது என்பதற்காகவே தூண்டி விட்டு போராட்டம் நடத்தப்படுகிறது. 

 

7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதை பத்திரிகையில் படித்தேன். கைதான 7 பேரின் குடும்பத்தினர் அளித்த மனுவை பெற்றுள்ளேன். முதலமைச்சரை சந்தித்து குண்டர் சட்டத்தில் இருக்கும் 7 பேருக்கு விலக்கு அளித்து விடுதலை செய்ய கோரிக்கை வைக்க உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.