தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று அதன் முடிவுகள் நேற்றுமுதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த முடிவுகளில் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

கணவனை எதிர்த்து போட்டியிட்டு ஒரு ஓட்டு வாங்கியுள்ளார் ஒரு பெண். தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத்தேர்தலில் திமுக சார்பில் கருப்பையா என்பவரும், சுயேட்சையாக அவரது மனைவியும் போட்டியிட்டனர். முடிவில் 1,702 ஓட்டுகள் பெற்று கருப்பையா வெற்றி பெற்றார். சுயேட்சையாக கணவரை எதிர்த்து போட்டியிட்ட அவரது மனைவி ஒரு ஓட்டு மட்டுமே வாங்கினார்.


ட்ரெண்டிங் வேட்பாளர்!

ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டு வாங்கியுள்ளார் பாஜக நிர்வாகி ஒருவர். கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பாஜக நிர்வாகியான கார்த்திக் என்பவரும் போட்டியிட்டார். முடிவில் ஒரே ஒரு ஓட்டு மட்டும் வாங்கி தோல்வியடைந்தார். அவர் குடும்பத்தில் 5 பேர் உள்ள நிலையில் ஒரு ஓட்டு தான் பதிவானதாக சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், தான் கார் சின்னத்தில் சுயேட்சையாகதான் போட்டியிட்டதாகவும், பாஜக சார்பில் போட்டியிடவில்லை என்றும், அதோடு அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் தான் போட்டியிட்ட இடத்தில் ஓட்டு இல்லை என்று அருமையான ஒரு விளக்கத்தை கூறியிருக்கிறார் கார்த்திக். ஒற்றை ஓட்டுவாங்கி ஓவர் நைட்டில் இந்தியா முழுவதும் பிரபலமடைந்துவிட்டார் கார்த்திக்.


பாட்டி சொல்லை தட்டாதே!

தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களின் டெபாசிட்டை காலி செய்து 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் 90 வயது பாட்டி ஒருவர். பாளையங்கோட்டை யூனியன் சிவந்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் 90 வயது நிரம்பிய மூதாட்டி பெருமாத்தாள் போட்டியிட்டார். பெருமாத்தாளுக்கு அந்த ஊர் மக்கள் அமோக ஆதரவு அளித்திருந்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் பெருமாத்தாள் 1,558 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வராணி, உமா ஆகியோரை டெபாசிட் இழக்க செய்துள்ள பெருமாத்தாள் பாட்டி, வெற்றி பெற வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.


ஆயத எழுத்து!

21 வயதிலேயே பஞ்சாயத்துத் தலைவியாகி அசத்தியிருக்கிறார் இஞ்சினியரிங் பட்டதாரி ஒருவர். தென்காசி மாவட்டம் கடையம் யூனியனில் வெங்கடாம்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் போட்டிக்கு லட்சுமியூர் பகுதியைச் சேர்ந்த சாருகலா என்ற இஞ்சினியரிங் பட்டதாரி போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். கடையம் யூனியனில் மிகவும் குறைந்த வயதில் பஞ்சாயத்துத் தலைவராக சாருகலா வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


சர்க்கார்!

இந்தத் தேர்தலில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் விஜய் மக்கள் இயக்கம் தான். 169 இடங்களில் போட்டியிட்டு 77 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. இதில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவரும் அடக்கம். காஞ்சிபுரம் கருப்படித்தட்டை காந்திநகர் 1வது வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயகக்த்தின் சார்பில் போட்டியிட்ட பிரபு ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.


கொடி பறக்குதா...!
இரு வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளனர் தம்பதியினர். குன்றத்தூர் ஒன்றியத்தில் கொளப்பாக்கம் ஊராட்சித்தேர்தலில் அதிமுக சார்பில் மாலதி ஏசு பாதமும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அவரது கணவர் ஏசுபாதமும் போட்டியிட்டனர். அதே போல மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் மனோகரனும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அவரது மனைவி சரஸ்வதி மனோகரனும் போட்டியிட்டனர். முடிவில் 4 பேருமே வெற்றிபெற்று அசத்தியுள்ளனர்.



திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காவேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மாலா சேகர். இவரது சகோதரி உமா கண்னுரங்கம். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காவேரிப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாலா சேகரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட உமா கண்ணுரங்கமும் வெற்றிபெற்றுள்ளனர்.



சிரிப்பு ஓட்டு!
அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு காசு கொடுத்து மக்களை கெடுத்து வைத்திருக்கின்றன என்று குற்றம்சாட்டுவார்கள். அது உண்மை தானோ என்று நினைக்க வைத்திருக்கிறார் ஒருவர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது. அப்போது வாக்குச்சீட்டில் ஒருவர், எனக்கு 500 ரூபாய் தராததால் யாருக்கும் ஓட்டு போடவில்லை என்று எழுதி வைத்திருந்தார். இதனை பார்த்து சிரித்த அதிகாரிகள் அந்த ஓட்டை செல்லாத ஓட்டாக அறிவித்தனர்.



குலுக்கல் பம்பர்!
நெல்லை மாவட்டம் மானூர் ஒன்றியம் வெள்ளப்பனேரி பஞ்சாயத்து 7வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 3 பெண்கள் போட்டியிட்டனர். வாக்குகள் எண்ணப்பட்டபோது கலா, மக்டோனா ஆகிய இருவரும் சம வாக்குகள் பெற்றிருந்தனர். இதனையடுத்து குலுக்கல் முறையில் வெற்றியாளரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற குலுக்கலின் முடிவில் கலா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
கடல்லயே இல்லையாம்!
ஒரு ஓட்டு வாங்கியதற்கு உலக அளவில் பிரபலமடைந்த வேட்பாளரைப் பார்த்தோம். ஒரு ஓட்டு கூட வாங்காத வேட்பாளரை இப்போது பார்ப்போம். ஈரோடு மாவட்டம் பெருந்துரை ஊராட்சி ஒன்றியத்தின் வார்டு கவுன்சிலர் பதவிக்கு சண்முகம், திருமூர்த்தி ஆகியோர் சுயேட்சையாக போட்டியிட்டனர். இருவரும் ஒரு ஓட்டு கூட வாங்கவில்லை. இருவருக்கும் வேறு இடத்தில் வாக்கு இருந்ததால் அவர்கள் வாக்கை கூட அவர்களுக்கு செலுத்திக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.