தமிழகத்தில் இருந்து ரேஷன் அரசி மற்ற மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு விற்கப்படுவது என்பது இன்று நேற்று கதையல்ல. பன்னெடுங்காலமாகவே நடைபெற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்ததுதான்.. ஆனால், தற்போது ஒரு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர், இந்நாள் எதிர்க்கட்சித்தலைவர், தமிழக அரசுக்கு அவசரக் கடிதம் அனுப்பி, அரிசி மாபியாவை கண்டறிந்து அழித்திடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளதால், இந்த அரிசி கடத்தல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
தமிழக ரேஷன் அரிசிக்கு ஏன் டிமாண்ட்:
• தமிழகத்தில் வினியோகிக்கப்படும் அரிசி என்பது இலவசமாக வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட 20 கிலோ அரிசி விலை இல்லா அரிசியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படுகிறது. அரிசியின் தரமும் பெரும்பாலும் சிறப்பாக இருக்கும் என்பதால், இந்த அரிசியை கடத்துவதற்கு டிமாண்ட் அதிகம். குறிப்பாக, ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இந்த அரிசி தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் இருந்து கடத்தப்படுவது, பல காலமாகவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடத்தல் அரிசி, “ஆந்திரா ரிட்டர்ன்” அரிசியாகும் கதை:
• பொதுவாக, தலைநகர்ச்சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வட மாவட்டங்களில் இருந்து கடத்தப்படும் ரேஷன் அரிசியானது, ஆந்திராவுக்குத்தான் எடுத்துச்செல்லப்படுகிறது. அங்குள்ள அரிசி ஆலைகளில் இந்த அரிசி பாலீஸ் செய்யப்பட்டு, புது பெயர் சூட்டப்பட்டு, மீண்டும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கே அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் இலவசமாக வினியோகிக்கப்படும் அரிசி, ஆந்திராவுக்குச் சென்று பாலீஸ் செய்யப்பட்டு, சில்லறை விற்பனையில், கிலோ 40 ரூபாய் என தமிழக மார்க்கெட்டிற்கு மீண்டும் வருகிறது. கர்நாடகா, கேரளம் ஆகிய இடங்களுக்கும் ஆந்திராவில் இருந்து புதுப்பெயருடன் தமிழக ரேஷன் அரிசி அனுப்பப்படுகிறது. இப்படித்தான் அரிசி கடத்தல் மாபியா, மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறது என ஆந்திராவின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெளிவாக தமது கடிதத்தில் தமிழக அரசுக்குத் தெரிவித்துள்ளார்.
எந்தெந்த வழிகளில் கடத்தப்படுகிறது:
• இருசக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம், லாரி, ரயில், பேருந்து எனப் பல்வேறு வழிகளில் தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அரிசி கடத்தப்படுகிறதாம். ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த சட்டமன்ற தொகுதியான குப்பம் தொகுதிக்கு உட்பட்ட 4 காவல் நிலையங்களில், கடந்த 16 மாதங்களில் மட்டும் 13 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாம். தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து 7 வழித்தடங்கள் மூலம் ஆந்திராவுக்கு அரிசி கடத்தப்படுவதாகவும், குறிப்பாக, ஆந்திரா- தமிழக எல்லைப்பகுதியான சித்தூர் மாவட்டத்தின் வழியாக ரேஷன் அரிசிக்கு ஆந்திராவிற்குள் செல்கிறது என சந்திரபாபுவே நாயுடு தெளிவாக அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, வாணியம்பாடி, தும்பேரி, பேர்ணாம்பட்டு ஆகிய இடங்களில் இருந்தும் ஆந்திர எல்லைக்குள் ரேஷன் அரிசி கடத்ததப்படுகிறதாம்.
கடத்தல் தடுப்புப் பிரிவு என்னச் செய்கிறது?
• ரேஷன் பொருட்கள், குறிப்பாக அரிசி கடத்தலைத் தடுப்பதற்கு, டிஜிபி அந்தஸ்து உயர் அதிகாரி ஒருவர் தலைமையில் , குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு என்ற தனிப்பிரிவு, தமிழக காவல்துறையில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவு அதிகாரிகளும் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனால், 10 டன் கடத்தல் அரிசி பறிமுதல் என்று ஒரு பக்கம் செய்தி வரும் நிலையில், மறுபக்கத்தில், 100 டன் அரிசி கடத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் தொடர்கதையாக வருகிறது என்பதுதான் யதார்த்தம் என அரசியல்வாதிகள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அதுவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் இருந்தே, அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
அரிசியும் அரசியலும்
• தமிழகத்தை பொறுத்தவரை, ரூபாய்க்கு படி அரிசி என்பதில் தொடங்கி, இன்றைய இலவச அரிசி வரை, தமிழக அரசியல் களத்தில், வாக்குகளைப் பெறுவதில் முக்கிய வாக்குறுதியாக அரிசி இருந்துள்ளது. தற்போது ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஒருவரே, தமிழக முதல்வருக்கு, அரிசிக் கடத்தலைத் தடுத்து நிறுத்த நடவடிக்கைக் கோரி கடிதம் எழுதுவதைச் சுட்டிக்காட்டி, பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். நிலைமை மோசமடைந்து வருவதால், உடனடியாக நடவடிக்கை எடுத்து, அரசுக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை துடைக்க வேண்டும் எனவும் டாக்டர் ராமதாஸ் அறிவுறுத்தி உள்ளார்.
என்ன மாயமோ? என்ன தந்திரமோ?:
• தமிழகத்தின் ரேஷன் கடைகளில், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு கைரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும், மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரேஷன் பொருட்கள் கடத்தப்படுவது, பொது வினியோகத்திட்டத்தில் எங்கோ ஓட்டை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுவதாகவே பார்க்கப்படுகிறது. அதைக் கண்டுபிடிக்க முன் வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
நம்பர் ஒன் தமிழகம்:
• தமிழகத்தின் பொது வினியோகத் திட்டத்தை, உச்சநீதிமன்றம் முதல் சர்வதேச அமைப்புகள் வரை பாராட்டியுள்ளன. அப்படிப்பட்ட திட்டத்தில், அரிசி கடத்தல் போன்ற குறைகள் நிச்சயம் களையப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது தமிழகத்தை, வளர்ச்சிப் பாதையில் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவேன் என களமாடி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிச்சயம், இந்த அரிசி கடத்தல் மாபியாவுக்கு முடிவு கட்டுவார் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.