வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை கனமழையின் தாக்கம் சூறைக்காற்றுடன் நீடித்து வருகிறது. இதனால், சென்னை உள்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.


இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா என்ற மாணவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நாளை விருதுநகர் மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.





மேலும், தனது கேள்விக்கு பதில் கிடைக்கும் விதமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.


அவரது கேள்வியை கண்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, “ இல்லை. இனி விடுமுறை இல்லை தம்பி. பள்ளிக்கு செல்லவும். சூரியன் வெளியே வந்துவிட்டது. இதனால், படிக்கவும் – விளையாடவும் – மகிழ்ச்சியாக இருக்கவும் – இதை தொடரவும். நமது மாவட்டத்தில் நல்ல மழை பெய்ய பிரார்த்திக்கவும்”என்று பதிவிட்டுள்ளார்.






அவரது பதிலைக் கண்ட அந்த மாணவர் “ஸ்ரீவில்லிபுத்தூரில் கனமழை சார். அதனால்தான் கேட்டேன்” என்று பதிவிட்டுள்ார்.





அந்த பதிவிற்கும் பதிலளித்துள்ள மாவட்ட ஆட்சியர் மேகநாதன் ரெட்டி, “நாளை மழையில்லை.  ஏற்கனவே தாமதமாகிவிட்டது. தூங்குங்கள். நாளை பள்ளி இருக்கிறது. இனிய இரவுகள் தம்பி” என்று பதிவிட்டுள்ளார்.






இதில், சுவாரசியமான நிகழ்வு என்னவென்றால் மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பிய மாணவர் தீவிர விஜய் ரசிகர். அவர் தனது டுவிட்டர் பக்கத்தின் டி.பி.யாக நடிகர் விஜயின் புகைப்படத்தை வைத்துள்ளார். மேலும், பின்னணி புகைப்படமாக பீஸ்ட் படத்தின் போஸ்டரை பதிவிட்டுள்ளார். 


அந்த மாணவருக்கு பதிலளித்துள்ள மாவட்ட ஆட்சியர் மேகநாதன் ரெட்டி தீவிர அஜித் ரசிகர் ஆவார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தின் பின்னணி புகைப்படமாக நடிகர் அஜித்குமார் பைக் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு இருசக்கர வாகனத்தின் நிழலில் ஓய்வு எடுக்கும் புகைப்படத்தை வைத்துள்ளார். மேலும், தனது பயோவில் தந்தை, ஐ.ஏ.எஸ்., தற்போது விருதுநகர் மாவட்ட ஆட்சியர், " வாழு, வாழவிடு அவ்வளவுதான் தத்துவம்" என்று வைத்துள்ளார். 


விஜய் ரசிகரான மாணவருக்கு, அஜித் ரசிகரான மாவட்ட ஆட்சியர் அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண