வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்துவருகிறது. விடிய விடிய பெய்யும் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியும், வீடுகளில் தண்ணீர் புகுந்தும் தலைநகரம் தத்தளிக்கும் நகரமாக மாறியிருக்கிறது.


அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு ரெட் அலெர்ட்டும் வானிலை ஆய்வு மையத்தால் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.




இதற்கிடையே மு.க. ஸ்டாலின் கடந்த இரண்டு நாள்களாக பல்வேறு இடங்களில் ஆய்வு செய்துவருகிறார். மேலும், தான் ஆய்வு செய்த இடங்களில் மக்களுக்கு அவர் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.


ஸ்டாலினின் ஆய்வு இன்றும் தொடர்ந்தது. இன்று தி.நகர், கொளத்தூர், போரூர் ஏரியில் ஆய்வு செய்த அவர் போரூரில் இருக்கும் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவை சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார்.


 






இந்நிலையில், சென்னையில் மழை பாதிப்பு சரியாகும்வரை அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


 






முன்னதாக முதலமைச்சர் ஆய்வு செய்தபோது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பிறகே மழை நீர் தேங்கும் சூழல் உருவாகியிருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டினர். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ”முந்தைய அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு புகார் எழுந்துள்ளது.


கடந்த ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடம் இருந்து பல கோடி ரூபாய் நிதி பெறப்பட்டும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. போதிய நடவடிக்கை எடுக்காமல் ஊழல் செய்ததால் பல இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது. மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் எஸ்.பி.வேலுமணி கமிஷன் மட்டுமே வாங்கியுள்ளார்.





தேங்கியுள்ள மழைநீரை அகற்ற தி.மு.க., கட்சி, அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்பின்னர் பின்னர் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க., ஆட்சியின் போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய பல கோடி ரூபாய் நிதி என்ன ஆனது? ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்ததாரர் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண