தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி விருதுநகர், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 


அதனை தொடர்ந்து தூத்துக்குடி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:


ரெட் அலர்ட் (அதிகனமழை)



  • விருதுநகர்

  • மதுரை

  • தேனி


ஆரஞ்சு அலர்ட் (கனமழை)



  • தூத்துக்குடி

  • திண்டுக்கல்

  • கன்னியாகுமரி

  • கோவை

  • திருப்பூர்

  • சிவகங்கை


மஞ்சள் அலர்ட்( மிதமான மழை)



  • ராமநாதபுரம்

  • மயிலாடுதுறை

  • நாகை

  • திருவாரூர்

  • தஞ்சாவூர்

  • புதுக்கோட்டை

  • அரியலூர்

  • பெரம்பலூர்

  • திருச்சி


திருநெல்வேலியில் கொட்டித்தீர்த்த கனமழை:


முன்னதாக, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு நீர்தேக்கத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்ததால் 20 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் வரத்து வருவதால் மணிமுத்தாறு ஆற்றில் 5 ஆயிரம் கன அடி நீர் நேற்று இரவு 11.30 க்கு மேல் திறந்து விடப்பட்டு வருகிறது. அம்பாசமுத்திரம் தாலுகா சிங்கம்பட்டி, வைராவிகுளம், மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, ஆலடியூர் மற்றும் கீழ்முகம் கிராமங்களின் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் செல்லும் என அறிவிக்கப்படுகிறது. எனவே, ஆற்றங்கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பொது விடுமுறை:


திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 18.12.2023 அன்று பொது விடுமுறை விடப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் கன மழை முதல் அதிகன மழை பெய்துவருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று 18.12.2023 பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


முன்னதாக,தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், “திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளுக்கு சுமார் 15000 கன அடி கொள்ளளவு நீர்வரத்து உள்ளதாலும், உபரி நீர் வெளியேற்றப்படும் சூழல் உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் இன்று (18.12.2023) வரும் என எதிர்பார்க்கப்படுவதாலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள்,  கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர  கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு  செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும் படியும்  எச்சரிக்கப்படுகிறார்கள்.


மேலும், தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட திருவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது” என உத்தரவு பிறப்பித்துள்ளார்.