சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாளை 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னையில் இன்று கன மழை பெய்யும்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யவுள்ளது. நாளை முதலே சென்னையில் கன மழை பெய்யும் என முன்னர் சொல்லப்பட்ட நிலையில், அது இன்றே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் மீண்டும் கணித்து கூறியுள்ளது.
மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் மாலைக்கு பிறகு இரவு நேரங்களில் கன மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. நாளை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறதா ?
மியான்மர் அருகே இருக்கும் வளிமண்டல சுழற்சி காரணமாக வங்கக் கடலில் இதுவரை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவில்லை. ஆனால், சில மணி நேரங்களில் அந்த சுழற்சி மறைந்து இன்று இரவுக்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
15ஆம் தேதி வரை கன மழை எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ள நிலையில் மத்திய மாவட்டங்கள், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் வரும் 15தேதி முதல் பரவலாகவும் சில மாவட்டங்களில் கன மற்றும் அதி கன மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது