நாம் தமிழர் கட்சியின் முக்கிய பெண் ஆளுமைகளுள் ஒருவர் காளியம்மாள். அவர் மேடைகளில் பேசினாலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் தேர்தல் பிரச்சாரங்களாக இருந்தாலும் தனக்கென ஒரு தனிப்பாணியை கொண்டிருப்பவர். அவரை சுற்றி சமீப காலங்களில் பல சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் உலா வரத் துவங்கின. குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காளியம்மாளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை, அவரை அவதூறாக பேசுகிறார் என்றெல்லாம் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.


கட்சியில் காளியம்மாளுக்கு மதிப்பு இல்லையா ?


அதன்பிறகு, முன்னர் மாதிரி கட்சி நிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சி விவாதங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் அவர் பெரிய அளவில் பங்கேற்கவில்லை. கட்சியின் மீது இருக்கும் அதிருப்தியால் ஒதுங்கியே இருக்கிறார் என்ற பேச்சுகளும் அடிபடத் தொடங்கின. 2026 தேர்தலுக்கு மற்ற கட்சிக எல்லாம் தயாராகிக்கொண்டிருக்கும் சூழலில் நாம் தமிழர் கட்சியில் காளியம்மாள் போன்ற பெண் ஆளுமைகள் ஓரங்கட்டப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தன.


திமுக-விற்கு செல்கிறாரா காளியம்மாள் ?


இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் காளியம்மாள், வேறு ஒரு கட்சிக்கு மாறப்போகிறார் என்றும் அவரை தங்களுடைய கட்சியில் இணைத்துக்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் முயற்சி செய்து வருவதாகவும் ஆனால், காளியம்மாளோ திமுகவில் சேர முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகியும் தற்போதைய திமுக மாணவரணி தலைவருமாக இருப்பவருமான ராஜீவ்காந்தியோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.


காளியம்மாளே சொன்னது இது


இந்நிலையில், இதுபோன்ற தகவல்கள் வெளிவருவது பற்றியும் அவர் மாற்றுக் கட்சிக்கு செல்ல யோசித்து வருவது உண்மைதானா எனவும் கேட்க அவரையே தொடர்புகொண்டு பேசினோம்.


அப்போது அவர், “வேறு ஒரு கட்சிக்கு நான் செல்வதாக வேறு யாரோ பதிவு போடுவதற்கு நன் எப்படி பொறுப்பாக முடியும் ? நான் சார்ந்தவர்கள் யாரும் அப்படியான பதிவு எதையும் போட்டிருக்கின்றோமா ? மற்றவர்கள் பேசும் புரளிக்கெல்லாம் நான் பதில்சொல்லிக்கொண்டிருக்க முடியாது” என்றார்.


மேலும், நாம் தமிழர் கட்சியிலேயே நீங்கள் தொடர்ந்து பயணிப்பீர்களா? என்ற கேள்விக்கு “நாம் தமிழர் கட்சியில்தான் இருக்கிறேன். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளாராகதான் தொடர்கிறேன்” என்றும் தெரிவித்தார்.


நாம் தமிழர் கட்சியிலேயே தொடர்ந்து பயணிப்பீர்கள், வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டீர்கள்தானே என்று கேட்டபோது “மற்றவர்களின் அனுமானத்திற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்றும் ; அப்படி ஏதும் இருந்தால் என் குரலாக நானே ஒலிப்பேன்” எனவும் காளியம்மாள் நம்மிடம் தெரிவித்துள்ளார்.


நாம் தமிழர் கட்சியில்தான் இருக்கிறேன். மாநில நிர்வாகியாக தொடர்கிறேன் என்று காளியம்மாள் சொன்னாரே தவிர, நாம் தமிழர் கட்சியை விட்டு செல்லும் எண்ணம் ஒருபோதும் தனக்கு இல்லை என்றோ, அது பற்றியான சிந்தனை தனக்கு வந்ததே இல்லையென்றோ அவர் எதுவும் சொல்லவில்லை. அப்படி ஏதும் இருந்தால், என் குரலாக நானே ஒலிப்பேன் என்று அவர் சொன்னதன் மூலம், விரைவில் ஏதோ ஒன்றை அவரே நேரடியாக அறிவிப்பார் என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அரசியலில் எதுவும் எப்போதும் நடக்கலாம். அதற்கு நாம் தமிழர் கட்சியோ, காளியம்மாளோ ஒன்றும் விதிவிலக்கல்ல.