தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபி-யாக பொறுப்பு வகித்தவர் சங்கர் ஜிவால். அவர் ஓய்வு பெற்றதையடுத்து புதிய டிஜிபி தேர்வு செய்ய வேண்டிய சூழல் தமிழக அரசுக்கு ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட உள்ளதாக ஏபிபி நாடு-க்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது. இவர் சென்னை மாநகர முன்னாள் ஆணையர் ஆவார்.

Continues below advertisement

மத்திய அரசுக்கு தமிழக அரசு அளித்துள்ள பரிந்துரை பட்டியலில் சந்தீப் ராய் ரத்தோர், சீமா அகர்வால் மற்றும் ராஜீவ்குமார் ஆகியோர் அடங்கிய 3 பட்டியலை அளித்துள்ளது. இவர்களில் சந்தீப் ராய் ரத்தோரை தேர்வு செய்துள்ளதாக தற்போது ஏபிபி நாடுக்கு தகவல் கிடைத்துள்ளது.

யார் இந்த சந்தீப் ராய் ரத்தோர்?

சங்கர் ஜிவாலுக்கு அடுத்தபடியாக சென்னைக்கு காவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் இந்த சந்தீப் ராய் ரத்தோர். இவர் 1992ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர். இவர் கோவையில் துணை ஆணையராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 

Continues below advertisement

தமிழ்நாட்டை உலுக்கிய கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய அதிகாரியாக செயல்பட்டவர். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பல்வேறு முக்கிய குற்றவாளிகளை கைது செய்தவர். சென்னையில் போக்குவரத்து காவல் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். 

இவர் போக்குவரத்து காவல் துணை ஆணையராக பணியாற்றிய காலத்தில்தான் சென்னையில் கடந்த 2000ம் ஆண்டு சிக்னலுக்கு எல்.இ.டி. விளக்குகளை பராமரிக்கும் விதிகள் கொண்டு வரப்பட்டது. இதனால், பெரியளவில் செலவு குறைக்கப்பட்டது. இது வெற்றி திட்டமாகவும் மாறியது. 

எஸ்பி, டிஐஜி:

போக்குவரத்து காவல் துணை ஆணையராக பணியாற்றிய பிறகு இவர் 2003ம் ஆண்டு சிபிசிஐடி எஸ்பி-யாக பொறுப்பு வகித்தார். அப்போது, தமிழ்நாட்டை அதிரவைத்த முத்திரைத்தாள் மோசடி வழக்கில் முக்கிய அதிகாரியாகவும் பொறுப்பு வகித்தார். தென் தமிழகத்தின் முக்கிய மாவட்டமான தூத்துக்குடியில் இவர் காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி அனுபவம் கொண்டவர். பின்னர், 2010ம் ஆண்டு மத்திய தொழிலக பாதுகாப்பு படை டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். 

பின்னர், 2016ம் ஆண்டு கடலோர பாதுகாப்பு குழும ஐஜியாகவும் பொறுப்பு வகித்தார். 2019ம் ஆண்டு தமிழக சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் பதவி வகித்தார். பின்னர், சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். 

சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்தாண்டு ஜுலை மாதம் காவலர்  பயிற்சி பள்ளி இயக்குனராக மாற்றப்பட்டார். விரைவில் சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே தமிழக டிஜிபி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டார். அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விரைவில் புதிய டிஜிபி நியமிக்கப்பட உள்ளார்.