நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த 7 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருந்த நிலையில், அதில் ஒருவருக்கு நேற்று ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், " ஒமிக்ரான் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
அண்மையில் தென்னாப்பிரிக்காவில் B.1.1.529 அல்லது ஓமைக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கண்டறியப்பட்டது. இந்த ஒமிக்ரான் வைரஸ் மிக அதிக எண்ணிக்கையில் உருமாற்றம் அடைந்திருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக 30-க்கும் மேற்பட்ட அதிவேகமாக பரவக்கூடிய புரதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தாக்கி அழிக்கும் தன்மையை பெற்றுள்ளது. இதன் காரணமாக, ஒமிக்ரான் தொற்றை கவலை அளிக்கத்தக்க உருமாற்றம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
இதன் அறிகுறிகள் என்ன?
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய தகவலின் அடிப்படையில், ஓமைக்ரானின் நோய்த் தொற்று அறிகுறிகள் பிற வகையோடு (ஆல்பா, பீட்டா, டெல்டா) ஒத்துப்போகின்றன. இருப்பினும், சுவை மற்றும் வாசனை இழப்பு, தீவிர காய்ச்சல், தொடர் மூக்கு ஒழுகுதல் போன்ற பொதுவான அறிகுறிகள் தென்படுவடுவதில்லை.
வறட்டு இருமல், உடல் சோர்வு, தொண்டை எரிச்சல் (வலி), தலைவலி, இரவு நேரத்தில் அதிக வியர்வை மற்றும் உடல் வலி, வயிற்றுப்போக்கு, மிதமான காய்ச்சல் ஆகியவை ஒமிக்றான் நோயாளிகளிடம் பொதுவாக காணப்படும் அறிகுறிகள் ஆகும்.
இருப்பினும், சில மாறுபட்ட அறிகுறிகள் தற்போது கண்டறியப்பட்டு வருகின்றன. உதாரணமாக, முந்தைய உருமாறிய தொற்றில் நோயாளியிடம் தொண்டை வலி(throat Pain) காணப்பட்ட நிலையில், தற்போது தொண்டை எரிச்சல் (scratchy throat) அதிகம் காணப்படுவதாக தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், கீழ் முதுகில் தசை வலி அறிகுறியும் ஒமிக்ரான் பாதிப்பின் தனித்துவ அறிகுறியாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
தடுப்பு நடவடிக்கைகள் என்ன? கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் தற்போது வரை தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா தடுப்பூசிகள் தீவிர உடல் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் தவிர்க்கிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலைத் ( ஆண்டிபாடி) தாண்டி அதிக ஆற்றல் பெற்ற வலிமையான செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தியும் (டி-செல்ஸ் அல்லது நினைவாற்றல் உயிரணுக்களே) பெறுகிறோம்.
உருமாறிய இந்த ஓமைக்ரான் தொற்று, ஆர்டிபிசிஆர் மற்றும் ராபிட் ஆண்டிஜென் பரிசோதனைகளிலிருந்து தப்பிவிடாது என்பதால், பரிசோதனைகளை அதிகரிப்பதோடு, பாதிப்பு அறிகுறி உடையவர்களை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஒமிக்ரான் வைரஸின் பரவல் மற்றும் பரிணாமம்ஆகியவற்றை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு மரபணு தரவின் ஆழமான வரிசைமுறை (Gene Sequencing) மற்றும் பகுப்பாய்வு முக்கியத் தேவையாக உணரப்படுகிறது.
ஏதேனும் ஆறுதல்: நாட்டில், தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரித்து காணப்படுவதாலும், நம்மில் அதிகமானோர் டெல்டா மாறுபாடுகளில் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாலும் (செரோ சர்வே) ஒமிக்ரான் பாதிப்பு அளவு மிதமாக இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது.
இந்தியாவில்: மருத்துவ ஆக்ஸிஜன் சாதனங்களின் தயார் நிலை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் திரு.ராஜேஷ் பூஷன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கிய ஆக்ஸிஜன் உற்பத்தி சாதனங்களின் செயல்பாட்டு நிலவரத்தை தினந்தோறும் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
நாட்டில் தற்போது 3,236 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் உற்பத்தி சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மொத்த உற்பத்தி திறன் 3783 மெட்ரிக் டன். இது தவிர 1,14,000 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளும் பிரதமர் நல நிதி மூலம் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 1374 மருத்துவமனைகளில் 958 திரவ மருத்துவ ஆக்ஸிஜன் சேமிப்பு டேங்குகள் மற்றும் பைப்லைன் வசதிகள் ஏற்படுத்தவும் மத்திய அரசு நிதி வழங்கியுள்ளதாகவும், இந்த வாய்ப்பை மாநிலங்கள் பயன்படுத்தி, ஆக்ஸிஜன் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
உலகளவில்: உருமாறிய கோவிட் ஒமிக்ரான் தொற்று வேகமாக பதவும் தன்மை கொண்டதால், சர்வதேச நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்மென்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2 மாதங்களில் மட்டும் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவலும், இறப்பு எண்ணிக்கையும் இருமடங்காக அதிகரித்துள்ளது
தற்போது 77 நாடுகளில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார். இது மேலும் பல நாடுகளுக்கு பரவ வாய்ப்பு உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் இந்த தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாகக் கூறிய அவர், இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே ஐரோப்பிய நாடுகளில் கோவிட் தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் தொடக்கப் பள்ளிகள் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.