திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி பொறுப்பேற்றார். வரும் ஜூன் மாதத்தோடு அவர் ஓய்வு பெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபி யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
3 பேர் கொண்ட பட்டியல்
டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர், சீனியாரிட்டி அடிப்படையில் 3 பேர் கொண்ட பட்டியலை தமிழ்நாடு அரசு மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கும். அந்த மூன்று பேரில் ஒருவரை தமிழகத்தில் டிஜிபியாக நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும். இந்த நடைமுறைபடி, வரும் மே மாதத்தில் சீனியாரிட்டி அடிப்படையில் 3 பேர் கொண்ட பட்டியலை மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தற்போது சீனியாரிட்டி அடிப்படையில் பார்த்தால், சென்னை காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால், டெல்லி காவல் ஆணையராக இருக்கும் சஞ்சய் அரோரா, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநரும் முன்னாள் சென்னை காவல் ஆணையருமான ஏ.கே.விஸ்வநாதன், ஊர் காவல் படை தலைவராக இருக்கும் பி.கே.ரவி, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் ஆகிய 5 பேர் பட்டியலில் உள்ளனர்.
’சஞ்சய் அரோரா, ராஜேஸ்தாஸ்க்கு இடமில்லையாம்’
ஆனால், தமிழ்நாடு ஐபிஎஸ் கேடராக இருந்து மத்திய அரசின் சிறப்பு பரிந்துரை பேரில் டெல்லி ஐபிஎஸ் கேடராக சஞ்சய் அரோரா மாறிவிட்டதால், அவர் தமிழ்நாடு டிஜிபிக்கான பரிந்துரை பட்டியலில் இனி இடம் பெற முடியாது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளதால் அவர் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற வாய்ப்பு குறைவு.
சட்டம் ஒழுங்கு டிஜிபி பட்டியலில் பி.கே.ரவி வாய்ப்பு எப்படி?
அதனால், பிகே ரவி, சங்கர் ஜிவால் மற்றும் ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய மூன்று பேரிடையே சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவியை பிடிப்பதில் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
1989 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியாக பிகே ரவி, தீயணைப்புத் துறை டிஜிபியாக இருந்து தற்போது ஊர்காவல் படைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரது 34 வருட பணி காலத்தில் பல்வேறு முக்கியமான வழக்குகளை திறம்பட விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தவர் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக இருந்தபோது பிகே ரவியின் பணி மெச்சத்தக்கதாக இருந்த நிலையில்,தீயணைப்பு துறை டிஜிபியாக ரவி இருந்தபோது, ‘விபத்தில்லா தீபாவளி’ திட்டத்தின் கீழ் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தும் தமிழ்நாடு முழுவதும் தீ விபத்துகளை தடுக்க 6 ஆயிரத்து 673 தீயணைப்பு வீரர்களை நியமித்தும், ஆயிரத்து 610 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்கள் நலனுக்காக நடத்தியும் பாரட்டை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேர்மையான அதிகாரியாக இருந்து அயலக பணியிலும் சிறப்பாக செயல்பட்டவர் பிகே ரவி என்பதால் அவருக்கான முக்கியத்துவம் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.
சென்னை கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு வாய்ப்பு எப்படி ?
பிகே ரவியை தவிர்து அடுத்து இருக்கும் இரண்டு பேரில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு வாய்ப்பு எப்படி என்பது குறித்து காவல்துறை தலைமைய வட்டாரத்தில் விசாரித்தோம். அதில், சென்னை மாநகர கமிஷனராக இருக்கும் சங்கர் ஜிவால், சென்னை மாநகர காவல் ஆணையராக இருக்கும் சங்கர் ஜிவால், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமாக உள்ளதாலும் நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் துணிவோடு செயல்படக் கூடியவர் என்ற பெயர் அவருக்கு இருப்பதாலும் சங்கர் ஜிவாலை தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக தேர்வு செய்வது குறித்து பரிசீலித்து மத்திய அரசிடம் தெரிவிக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
புகார் கொடுப்பவர் சிறியவர், பெரியவர் என்று பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுப்பதில் சங்கர் ஜிவாலுக்கு நற்பெயர் உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டிஜிபி ஏகே விஸ்வநாதனுக்கும் வாய்ப்பு எப்படி ?
சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை பொறுத்தவரை அவர் கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்தவர். கடந்த கால ஆட்சியில் ஆளும் வர்க்கத்திற்கு நெருங்கமாக இருந்தவர் என்று கூறப்பட்டாலும் தமிழரான ஏ.கே..விஸ்வநாதன் சென்னை மாநகர காவல் ஆணையராக இருக்கும்போது சரி, மற்ற இடங்களில் பணியாற்றும்போது சரி, மிக சிறப்பாக செயல்பட்டு மக்களின் ஊடகங்களின் பாராட்டை பெற்றவர் என்பதால் அவரையே அடுத்த டிஜிபியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்கலாம் என கோட்டையில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்லியுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
இருப்பினும், தமிழ்நாடு அரசு அனுப்பவுள்ள பட்டியலில் சங்கர் ஜிவால், ஏகே விஸ்வநாதன், பிகே ரவி ஆகிய மூன்று பேரில், தமிழக அரசு விரும்பும் ஒருவரை நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்கப் போகிறதா ? அல்லது மத்திய அரசே ஒருவரை தேர்வு செய்துக் கொடுத்து அவரை டிஜிபியாக நியமிக்க வலியுறுத்தப்போகிறதா என்ற கேள்விக்கு இன்னும் சில மாதங்களில் விடை கிடைத்துவிடும்.
எது எப்படி இருந்தாலும் தமிழ்நாடு அரசு யாரை இங்கு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்க விருப்பப்படுகிறதோ அவரையே மத்திய உள்துறை டிக் அடிக்கும் என்றும் கூறப்படுகிறது.