வருவாய்த் துறை அதிகாரிகள் பதவி உயர்வில், உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதால், 200-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் பதவி இறக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். 


தமிழ்நாட்டில் நிதித் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை என பல்வேறு அரசுத் துறைகள் நிர்வாகம் மற்றும் மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான துறைகளின் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். 


இதில் வருவாய்த் துறையில் பணியாற்றும் வருவாய் உதவியாளர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தப் பணிக்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதி,  பட்டப் படிப்பு ஆகும். அதேநேரத்தில் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுடன் குரூப் 4 தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் இளநிலை உதவியாளர்கள், பதவி உயர்வின் மூலம் வருவாய் உதவியாளர்களாகப் பணியாற்றலாம்.


பதவி உயர்வின்போது குழப்பம் 


பதவி உயர்வின்போது எந்த வருவாய் உதவியாளர்களுக்கு முதலில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கேள்வி எழுந்தது. இதில் பதவி உயர்வு வழங்கும்போது பட்டப் படிப்பைத் தகுதியாகக் கொண்ட, குரூப் 2 தேர்வுகளின் மூலம் நேரடியாக நியமிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கடந்த 1995ஆம் ஆண்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அந்த ஆணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. 


இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று 2009-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கிடையே தமிழக அரசாணையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் மீண்டும் ஆணையிட்டது. இதனால் குரூப் 4 தேர்வின்மூலம் தேர்வாகி பட்டப் படிப்பை முடிக்காத அதிகாரிகளின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.


பதவி இறக்கத்துக்கு ஆளாகும் அதிகாரிகள்


தமிழ்நாடு அரசாணையைச் செயல்படுத்தும்போது, 1995ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கணக்கில்கொள்ள வேண்டும். இதில் இடைப்பட்ட காலத்தில் குரூப் 4 தேர்வு மூலம் தேர்வாகி, இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ), வருவாய்க் கோட்ட அலுவலர் (ஆர்.டி.ஓ),  வட்டாட்சியர் உள்ளிட்ட பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் ஒரு நிலை பதவி இறக்கம் செய்யப்படுவார்கள். இவ்வாறு மாநிலம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பதவி இறக்கப்பட்டு வருகின்றனர்.


குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் 4 வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்களாகப் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு குரூப் 4 தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று, வருவாய்த் துறை அதிகாரிகளாகப் பணியாற்றி வருவோர் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.