கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை, திருப்பூர், கோவை, தென்காசி மற்றும் திருநெல்வேலியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


அதே சமயத்தில் தமிழ்நாட்டில் இன்று, ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், தென்மேற்கு  வங்கக்கடல்   பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று  மத்தியமேற்கு மற்றும் அதனை   ஒட்டியுள்ள   தெற்கு  வங்கக்கடல்   பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (24.05.2024) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து , புயலாக வலுப்பெற்று, 25.05.2024 காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது, வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்று, வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ரெமல் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.