சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்று நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இந்த கூட்டத்திற்கு பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “இந்த ஆலோசனை கூட்டத்தில் சில முடிவுகளை எடுத்துள்ளோம். இதன்படி, கொரோனா பரிசோதனை செய்த 24 மணிநேரத்தில் சோதனை முடிவை வழங்கிட முடிவு செய்துள்ளோம். அவர்கள் குறித்த தகவல்களை கண்காணிக்கும் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, கொரோனா பாதிப்பு உள்ளவருக்கு உடனே அட்மிஷன் அளிக்கப்படும்.


முதல்வர் காப்பீடு திட்டம் குறித்து சேலத்தில் தனியார் மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் என்ன வகை கட்டணம் அதில் மூன்று வகையான கட்டணங்கள் உள்ளது. அவற்றை குறிப்பிட்டு மருத்துவமனையில் விளம்பர பலகை வைக்க அறிவுறுத்தியுள்ளோம். அதில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் எங்கு புகார் அளிக்கலாம் என்ற உதவி எண்ணும் இருக்கும்.




மின்கட்டணங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளது. மின்கட்டணம் குறித்து ஏற்கனவே சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு சில மாற்று கருத்துகள் வந்ததால் முதல்வர் அளித்த வழிகாட்டுதல்படி மின்கட்டணம் குறித்து அறிவிப்பு வெளியிட்டோம். அதன்படி, மின்கட்டணத்தை அளவிட உங்கள் வீட்டில் மின் கட்டண மீட்டரில் உள்ள யூனிட் அளவை செல்போனில் புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப் மூலமாக அனுப்பலாம். இரு நாட்களுக்கு முன்பு ஆய்வுக்கூட்டம் நடத்தி ஒரு வாட்ஸ் அப் நம்பர் கொடுத்திருக்கிறோம். அந்த நம்பருக்கு புகைப்படம் அனுப்பினால் போதும். பின்னர், மின்கட்டணத்தை செலுத்த சொல்லும்போது அந்த படத்தை எடுத்துச்சென்று, அந்த அளவிற்கு ஏற்ப மின்கட்டணம் செலுத்தினால்போதும். இப்போது அதற்கு அவசரத்தேவை இல்லை. அதற்கு போதிய கால அவகாசம் உள்ளது” என்று கூறினார். 




தமிழகத்தில் மின்கட்டணம் செலுத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்திப்பதாக கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். மேலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா முதல் அலையின் தாக்கத்தின்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திற்கு மின்கட்டணம் செலுத்துவதிலும் பல இடங்களில் சிரமம் ஏற்பட்டது. பல இடங்களில் தொடர்பே இல்லாமல் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளுக்கு லட்சக்கணக்கில் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்ற சம்பவங்களும் அரங்கேறியது. மின் யூனிட் கணக்கீட்டால் ஏற்பட்ட குளறுபடிகளால் இத்தகைய தவறுகளும், சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கு ஒரு தீர்வுகாண வேண்டும் என்று மின் நுகர்வோர் சார்பில் தொடர்ந்து அளிக்கப்பட்ட வலியுறுத்தலின் பேரில், தற்போது செல்போனில் புகைப்படம் எடுத்து மின் கணக்கீடு செலுத்தும் முறையை அறிமுகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.