கடந்த சில நாள்களாக, தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த ஆடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனான அமைச்சர் உதயநிதியும், மருமகனான சபரீசனும் கடந்த இரு ஆண்டுகளில் 30,000 கோடி ரூபாய் சேர்த்துவிட்டனர் என்று கூறுவதுபோல் இடம்பெற்றிருக்கிறது.


புயலை கிளப்பிய ஆடியோ லீக் விவகாரம்:


அதிமுக, பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக,  பாஜக சார்பில் சில நிர்வாகிகள், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து பேசியுள்ளனர். ஆடியோ லீக் விவகாரம் தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பி வந்த நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.


அதில், ஆடியோவில் சொல்லப்பட்டது போல் யாரிடமும் எந்த காலத்திலும் நேரிலோ, தொலைபேசியிலோ பேசவில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.


"அரசியல் தரம் இவ்வளவுதான்"


பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமரிசித்துள்ள அமைச்சர் தியாகராஜன், "பாஜக மாநில தலைவர் யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்லாத ஒன்றை, ஆடியோவாக வெளியிடும் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கியுள்ளார். அவரது அரசியலின் தரம் இவ்வளவுதான்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாங்கள் ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் பல வரலாறு காணாத சாதனைகளையும், புதிய திட்டங்களையும் ஒரு மனிதாபிமான நிர்வாகத்தையும் அளித்துள்ளோம். இதையே நாங்கள் திராவிட மாடல் ஆட்சி முறை என்று அழைக்கிறோம்.


இத்தகைய உயரிய இலக்குகளை அடைய நாங்கள் மிகப்பெரிய நிதி சீர்திருத்தங்களை மேற்கொண்டு கடந்த பத்தாண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளை இரண்டே ஆண்டுகளில் சாதித்துள்ளோம். இவை கடந்த பத்தாண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு செய்தவற்றை விட மகத்தான சாதனைகளாகும். இதனை நேரடியாக ஒப்புநோக்கி பார்த்தாலே திராவிட மாடல் ஆட்சியின் செயல் வேகம் தெரியும்.


பிளாக் மெயில் கும்பல்:


இத்தகைய சாதனைகளை சில சக்திகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் எங்களது சிறப்பான பணிகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நவீன இத்தகைய ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி மற்றும் சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. எனவே, அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.


இவர்களிடம் இருந்து என்னைப் பிரிப்பதன் மூலமாக தங்களது அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது ஒரு பிளாக் மெயில் கும்பல். ஆனால் இது போன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது" என குறிப்பிட்டுள்ளார்.