வரும் ஜனவரி மாதத்திற்கு பின் ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார்.
அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்:
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, விஜய்யின் அரசியல் வருகையை தொடர்ந்து தினம் தினம் அரசியல் அதிரடிகள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில், ரேஷன் கார்டு உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அருப்புக்கோட்டையில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகளின் தொடக்க விழாவில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
அதோடு, முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என கூறியுள்ளார்.
"அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை"
வரும் தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க திமுக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே, மகளிர் உரிமைத் தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாஜகவுடன் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் கூட்டணி வைக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். அதோடு, விஜய்யின் அரசியல் வருகையும் தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.
திமுக, பாஜக எதிர்ப்பு என இரண்டையும் கையில் எடுத்துள்ளார் விஜய். இவர்களை தவிர, நாம் தமிழர் கட்சியும் முக்கிய அரசியல் சக்தியாக உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
தவெக தலைவர் விஜய்யுடன் ஒரே மேடையில் விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கலந்து கொள்ள உள்ளதாக வெளியான செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகினாலோ அல்லது அதிமுக கூட்டணிக்கு பாஜக திரும்பினாலோ போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, சவால்களை சமாளித்து ஆட்சியை தக்க வைக்க அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருக்கிறது.