தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள முக்கிய நகரம் நிசமாபாத். அங்கிருந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள பல பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பல பகுதிகளுக்கும் இயக்கப்படுகிறது. நிசமாபாத்தில் இருந்து வாரங்கலுக்கும், வாரங்கல்லில் இருந்து நிசமாபாத்திற்கும் அரசுப்பேருந்துகள் அடிக்கடி இயக்கப்பட்டு வருகிறது.

பேருந்து ஓட்டிக்கொண்டே திருடிய ஓட்டுனர்:


அந்த வகையில், வாரங்கல்லில் இருந்து நிசமாபாத் நோக்கி அரசுப்பேருந்து ஒன்று நேற்று இயக்கப்பட்டது. அந்த பேருந்தின் ஓட்டுனர் இருக்கை அருகே பெண் பயணி ஒருவர் தனது கைப்பையை வைத்திருந்தார். பெண் பயணி தனது கைப்பையில் தங்க நகையை வைத்திருப்பதை ஓட்டுநர் கவனித்துள்ளார்.


பேருந்தை ஓட்டிக் கொண்டிருக்கும்போதே அந்த பேருந்து ஓட்டுனர் பெண் பயணியின் பையைத் திறந்து அதில் இருக்கும் நகையை திருடுகிறார். இதை ஓட்டுனரின் பின்னால் இருந்த பயணி ஒருவர் கவனித்துவிட்டார். ஆனால், அவர் சத்தம் ஏதும் போடாமல் தனது செல்போனில் இதை வீடியோவாக எடுத்தார்.


சிக்கிக்கொண்ட டிரைவர்:






பின்னர், இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் பயணிகள் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் ஓட்டுனரிடம் இருந்து நகையைப் பறிமுதல் செய்தனர். அப்போது, நகைக்கு சொந்தக்காரரான பெண் பயணி ஓட்டுனரை கடுமையாக திட்டினார். அப்போது, அருகில் இருந்த பெண் போலீசார் நகை கீழே விழுந்திருந்ததா? அல்லது எடுத்தீர்களா? என்று முதலில் கேட்டனர்.


அதற்கு முதலில் ஓட்டுனர் கீழே விழுந்திருந்தது என்று கூறினார். பின்னர் திரும்ப திரும்ப கேட்கவும் தான் எடுத்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், அவரை போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய ஓட்டுனரே அவர்களின் உடைமைகளை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.